ஸ்விஸ் வங்கிக் கணக்கில் இருப்பு வைத்திருக்கும் இந்தியர்களின்  விவரங்களை  வெளியிட முடியாது என மத்திய நிதியமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.  சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்களின்   விவரங்களைப் பெற்று அவர்களை அம்பலப்படுத்துவதுடன்,  அவர்கள் முறைகேடாக பதுக்கி வைத்துள்ள பணத்தை மீட்டு   ஒவ்வொரு இந்தியரின்  வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என  தேர்தல் வாக்குறுதியாக பாஜக தெரிவித்திருந்தது.  ஆனால் தற்போது   ஸ்விஸ் வங்கி கணக்கு விவரங்களை வெளியிட முடியாது என தெரிவித்திருப்பது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்  எழுந்த ஒரு கேள்விக்கு பதில் அளித்துள்ள நிதியமைச்சகம் இந்தியர்களின் சுவிஸ் வங்கிக் கணக்கு விவரங்களை வெளியிட முடியாது என தெரிவித்துள்ளது .  மேலும்  இது குறித்து தெரிவிக்கையில்  சுவிஸ் வங்கி இந்திய அரசின் மீது வைத்த  அதே நம்பிக்கையை காப்பாற்ற  இந்தியா முயற்சிக்கிறது ,  இதற்காக சுவிஸ் மற்றும் இந்தியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது .  ஒரு நம்பகத் தன்மையின் அடிப்படையிலேயே அந்த விவரங்களை வெளிநாட்டு வங்கிகள் அரசுக்கு கொடுத்துள்ளது என்பதால் அதே நம்பகத்தன்மையை காப்பாற்ற அமைச்சகம் முயற்சி செய்கிறது என பதில் அளித்துள்ளது. 

மத்திய அரசு கேட்டுக் கொண்டதன் படி சுவிட்சர்லாந்து  வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்கள் அடங்கிய முதல் பட்டியலை இந்தியாவிடம்  வழங்கப்பட்டுள்ளது.   அதேபோல் சுமார் 75-க்கும் மேற்பட்ட நாடுகள் அந்தந்த நாட்டு வங்கிகளில் இருப்பு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை அரசிடம்  வழங்கியுள்ளது .  சுவிஸ் வங்கி விவரங்களைப் போலவே  ,  பிறநாட்டு வங்கி கணக்கு விவரங்களையும் தெரிவிக்க முடியாது என நிதி அமைச்சகம் மறுத்துள்ளது .  அதாவது வெளிநாட்டில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தின் மதிப்பு சுமார் 490 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருப்பது குறிப்பிடத்தக்கது