அமெரிக்க ஐக்கிய நாடுகளின் 46வது குடியரசுத்தலைவராக, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் தேர்வு பெற்று இருக்கின்றார். சுமார் 7.5 கோடிக்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்று வரலாறு படைத்து இருக்கின்றார். அவருக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். 

மேலும், கடந்த காலங்களில் ஜனநாயகக் கட்சி அரசுகள், இந்தியாவுடன் நட்புறவைப் பேணி வளர்த்தனர். அதே நிலைமை இனியும் தொடரும் என்று நம்புகிறேன். ஜோ பைடன் தம் 29 ஆவது வயதில் அமெரிக்கச் செனட் சபை உறுப்பினராகத் தேர்வு பெற்றவர். தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்றவர். குடியரசுத் துணைத் தலைவராக எட்டு ஆண்டுகள் பொறுப்பு வகித்தவர். அரசியலில் நீண்ட காலம் அனுபவம் பெற்ற பழுத்த அரசியல்வாதி. எனவே அவரது தலைமையை அமெரிக்க மக்கள் ஏற்றுக்கொண்டு இருக்கின்றார்கள்.

அமெரிக்காவில் இந்திய இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு, டிரம்ப் ஆட்சிக் காலத்தில் விதிக்கப்பட்ட தடைகள் இனி தளரும்; மேலும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கின்றது.அதற்கான உறுதிமொழியை, ஜோ பைடன் தனது தேர்தல் பரப்புரையில் வழங்கி இருக்கின்றார். 

அதை அவர் செயல்படுத்துவார் என்று எதிர்பார்க்கின்றேன். அது மட்டும் அல்ல; இந்தத் தேர்தலில் அமெரிக்காவில் முதன் முறையாக ஒரு பெண், அதுவும் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த, தாய் வழியில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரீஸ், அமெரிக்கக் குடியரசுத் துணைத் தலைவராகப் பொறுப்பு ஏற்கின்றார் என்ற செய்தி உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. அவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.