Asianet News TamilAsianet News Tamil

ஜீ-தமிழ் டிவிக்கு நோட்டீஸ்… பாஜக அண்ணாமலைக்கு வெற்றி!!

பிரதமரை கேலி செய்த ஜீ-தமிழ் சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில் தற்போது அந்த சேனலுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. 

notice for ztamil channel for making fun on pm
Author
Tamilnadu, First Published Jan 17, 2022, 9:01 PM IST

பிரதமரை கேலி செய்த ஜீ-தமிழ் சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில் தற்போது அந்த சேனலுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒளிபரப்பாகும் பொழுதுபோக்கு சேனல்களில் பாடல்கள் பாடுவது, நடனம் ஆடுவது, காமெடி நிகழ்ச்சிகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, அனைத்து தொலைக்காட்சிகளும் குழந்தைகள் பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது, காமெடி செய்வது என்று நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், தமிழில் ஒளிபரப்பாகும் முக்கியமான பொழுதுபோக்கு சேனலில் ஒன்றான ஜீ-தமிழ் தொலைக்காட்சியில், குழந்தைகள் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. அதில், புலிகேசி மன்னர் போன்ற வேடத்தில் ஒரு குழந்தையும், மங்குனி அமைச்சர் வேடத்தில் ஒரு குழந்தையும் நடித்திருந்தது. அந்த இரண்டு குழந்தைகளும் பிரதமர் மோடியின் கருப்பு பண நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது உள்ளிட்ட நிகழ்வுகளை விமர்சித்து வசனங்களை பேசியிருந்தன.

 

இந்த காட்சிகள் நேற்றிலிருந்து இணையத்தில் வைரலானது. பாஜக எதிர்ப்பு மனநிலை கொண்ட நெட்டிசன்கள் இந்த வீடியோவை பரவலாக பகிர்ந்து ட்ரெண்ட் செய்தனர். இந்த நிலையில், இந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார். இதுக்குறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் என்னைத் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி டிவி ஷோவில் பிரதமரின் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி கேட்டறிந்தார். நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள் என்று குறிப்பிட்டிருந்தார். 

 

இதையடுத்து, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறைக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் ஜீ தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 7 நாட்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி பாஜக தலைவர் அண்ணாமலை,  நீதிக்காக நிற்கும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுகு நன்றி தெரிவித்தார். மேலும் குழந்தைகளை எந்த பிரச்சாரத்திற்கும் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார். நாங்கள் ஊடகங்களை மிகவும் மதிக்கிறோம். பாஜக அதனை தொடர்ந்து செய்யும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios