நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பை அண்மையில் உறுதிப்படுத்தினார்.  ஜனவரியில் கட்சி தொடக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு அறிவித்த ரஜினி, அவருடைய கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பாஜகவிலிருந்து வந்த அர்ஜூனமூர்த்தியையும் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் அறிவித்தார். அவருடைய அரசியல் பிரவேசம் அறிவிப்பு பற்றி எதிர்க்கட்சிகள் பலவிதமான கருத்து தெரிவித்தன.
ஆனால், அதிமுகவில் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வரவேற்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், வாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி அமைப்போம் என்றும் அறிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ, ரஜினி தொடங்கிய பிறகு கருத்து தெரிவிக்கிறேன் என்று அறிவித்தார். இதேபோல அதிமுக அமைச்சர்கள் பலரும் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்தார்கள். இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ ரஜினி அரசியல் பிரவேசம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர்  கூறுகையில், “தமிழக அரசியலில் நடிகர் ரஜினிகாந்த் வருகையால் ஒரு புதுமையும் நடக்க போவதில்லை. ரஜினிகாந்த் கட்சிக்கு அதிமுகவினர் செல்லமாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.