கிரீன் ஸ்டுடியோஸ்’ ஞானவேல் ராஜா தயாரிக்க, ஆனந்த் சங்கர் இயக்கத்தில் தேவரகொண்டாவுடன் சத்தியராஜ்,நாசர், யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘நோட்டா’ வரும் 5 தேதி தமிழ்,தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாவதாக இருந்து, இன்று முதல் முன்பதிவுகளும் துவங்க ஆரபித்துவிட்டன.

இந்நிலையில் ’நோட்டா’ படத்திற்கு தடை விதிக்கக் கோரி தணிக்கை குழு முன்னாள் உறுப்பினர் ஜெகதீஸ்வர் ரெட்டி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த படத்தை பார்த்தால் தேர்தலில் மக்கள் நோட்டாவை தான் அதிக அளவில் தேர்வு செய்வார்கள். நோட்டாவை ஊக்குவிக்கும் வகையில் படம் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஓட்டுபோட விரும்பாத வாக்காளர்கள் தங்கள் வாக்கை நோட்டாவில் பதிவு செய்யலாம் என்பது வழக்கம். நோட்டா படம் வேட்பாளர்களை தேர்வு செய்ய விரும்பாதவர்கள் செயலை ஊக்குவிப்பதுபோல் உள்ளது. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. எல்லோரும் நோட்டாவில் வாக்கை பதிவு செய்தால் தேர்தல் குழப்பமாகி விடும். 

தெலுங்கானாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த படத்தை பார்த்தால் நோட்டாவில் வாக்குப்பதிவு செய்வார்கள். போலீஸ் டி.ஜி.பி, தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகள் படத்தை பார்த்த பிறகே திரையிடுவது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று ஜெகதீஸ்வர் ரெட்டி தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 படத்திற்கு முறையான சென்சார் முடிந்த நிலையில், இப்புகாரை தேர்தல் ஆணையம்  எந்த அளவுக்கு சீரியஸாக எடுத்துக்கொள்ளும் என்பது தெரியவில்லை. ஒருவேளை படத்துக்கு தடை விதிக்கப்பட்டால் பல நூற்றுக்கணக்கான தியேட்டர்கள் புக் செய்தது, பத்திரிகை விளம்பரங்கள், போஸ்டர்கள் அடித்து ஒட்டியது போன்ற வழிகளில் தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் வரும்.தாங்குவாரா தயாரிப்பாளர்?