அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை நான் ' தில் 'பாலாஜி என்று தான் அழைப்பேன். நான் ஏதோ தவறாக பேசுகிறேன் என்று கருதவேண்டாம். உண்மையிலேயே அவர் ' தில் ' பாலாஜி தான். செந்தமிழ் என்றால் செழுமையான தமிழ் என்று பொருள். அப்படித்தான் செய்தில் என்றால் செழுமையான தில் என்று பொருள்.
தமிழக மின்சார துறை அமைச்சரின் பெயர் இனி செந்தில்பாலாஜி அல்ல ' தில் ' பாலாஜி என நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் பேசியுள்ளார். தனது சீட்டை விட்டுக் கொடுத்துவிட்டு, வெளியில் வந்து விட்டு, மீண்டும் அந்த சீட்டை எப்படிப் பிடிப்பது என்று நன்கு அறிந்து வைத்திருப்பவர் தான் செந்தில்பாலாஜி என்றும் பார்த்திபன் பாராட்டி உள்ளார். அவரின் இந்த பேச்சு செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
கரூர் மாவட்டம் ராமேஸ்வரம் பட்டியை சேர்ந்தவர் செந்தில் பாலாஜி. அவரின் இயற்பெயர் செந்தில்குமார், நியூமராலஜி படி தனது பெயரை மாற்றிக் கொண்டார். மாணவப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு கொண்டவரான அவர், முதலில் அதிமுகவில் இணைந்தார். அங்கு ஒன்றிய கவுன்சிலராக இருந்த அவர் பின்னர் திமுகவில் சேர்ந்தார். 2000 வது ஆண்டில் அதிமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டது. 2006 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக சட்டமன்றத்தில் நுழைந்தார். 2011-ம் ஆண்டு மீண்டும் கரூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற அவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு திடீரென மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார். எனினும் அடுத்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தினகரன் அணியில் சேர்ந்து செயல்பட்ட அவர் திமுகவுக்கு கட்சி மாறினார்.

இந்நிலையில் மீண்டும் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று அரசியலில் பல ஏற்ற இறக்கங்களை பார்த்த செந்தில் பாலாஜி மீண்டும் திமுக அமைச்சரவையில் அசைக்க முடியாத அமைச்சராக இடம் பிடித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராகவும், கொங்கு மண்டலத்தை திமுக தளபதியாகவும் ஸ்டாலினால் அடையாளம் காணப்பட்டுள்ளார் செந்தில் பாலாஜி. கடந்த சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுகவால் ஒரு இடத்தைக் கூட கைப்பற்ற முடியாமல் போனது, எனவே தற்போது கொங்கு மண்டலத்தில் திமுகவை வலுப்படுத்தும் பொறுப்பு செந்தில் பாலாஜியிடம் ஒப்படைத்திருக்கிறார் ஸ்டாலின். கோவையில் முகாமிட்டுள்ளார் செந்தில்பாலாஜி 24 மணி நேரமும் சுற்றி சுழன்று கொங்கை திமுகவின் கோட்டையாக்கும் முயற்சிகளில் முனைப்பு காட்டி வருகிறார். இந்நிலையில் ஆற்றல் என்ற தனியார் அமைப்பின் சார்பில் ஆற்றல் விருது வழங்கும் விழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரூரில் நடைபெற்றது.
அதில், நடிகர் இயக்குனர் பார்த்திபன் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆட்டோ ஓட்டுனர், விவசாயிகள், துப்புரவு பணியாளர்கள், செவிலியர்கள், வீட்டுவேலை செய்பவர்கள் என 74 தொழில்களின் அடிப்படையில் அவர்களின் நேர்மையை மனிதநேயத்தை உழைப்பைப் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டது. முன்னதாக அதில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, எனது தொடர் வெற்றியை பாராட்டி ஆற்றல் அமைப்பு எனக்கு விருது வழங்கி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்ற சமூக அமைப்புகள் தொடர்ந்து பலரையும் ஊக்கப்படுத்தி வருகின்றன. இந்த பணி தொடர வேண்டும். என்னை போன்றவர்கள் தொடர்ந்து உழைக்க உந்துசக்தியாக இருந்து வருபவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்தான். உழைப்பு உழைப்பு என்றால் அதற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தான் சிறந்த உதாரணம். அவரைப்போலவே உதயநிதி ஸ்டாலின் அவர்களும் சுற்றிச் சுழன்று மக்கள் பணியாற்றி வருகிறார். இப்படிப்பட்ட தருணத்தில் என்னை தேர்ந்தெடுத்து விருது கொடுத்தமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என பேசினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குனர் பார்த்திபன் கூறியதாவது:- அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை நான் ' தில் 'பாலாஜி என்று தான் அழைப்பேன். நான் ஏதோ தவறாக பேசுகிறேன் என்று கருதவேண்டாம். உண்மையிலேயே அவர் ' தில் ' பாலாஜி தான். செந்தமிழ் என்றால் செழுமையான தமிழ் என்று பொருள். அப்படித்தான் செய்தில் என்றால் செழுமையான தில் என்று பொருள். அதனால்தான் அவர் பெயர் செந்தில் பாலாஜி, செழுமையான ' தில்' உடைய பாலாஜி என்று அர்த்தம் என்றார். அப்போது அரங்கத்தில் இருந்தவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.தொடர்ந்து பேசிய பார்த்திபன், செந்தில் பாலாஜியைப் பற்றி பக்கம் பக்கமாக பேசலாம், ஆனால் அவரைப்பற்றி குறைந்த அளவில் பேச விரும்புகிறேன். உதாரணத்திற்கு நான் அரங்கத்திற்கு வந்தவுடன் அவரது இருக்கையை எனக்கு கொடுத்துவிட்டு அவர் வேறு இருக்கையில் அமர்ந்தார். அமைச்சருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் என்னை அமர வைத்தார். உண்மையிலேயே அவருக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடித்த விளையாட்டு தான். " ஒரு சீட்டை விட்டு கொடுத்து விட்டு, வெளியில் வந்து விட்டு, மறுபடியும் அந்த சீட்டை பிடிப்பது எப்படி என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது" எனக் கூறினார்.
அப்போது செந்தில் பாலாஜி பார்த்திபனுக்கு கைகூப்பி நன்றி தெரிவித்தார். அரங்கத்தில் இருந்தவர்களும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்களும் கைதட்டி விசில் அடித்து உற்சாகத்தை வெளிபடுத்தினர். பார்திபன் மேலும் பேசுகையில், சில விஷயங்களை வெளிப்படையாக பேச வேண்டுமா என்று நான் யோசிப்பதுண்டு, அந்தவகையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுகவிலிருந்து திமுகவுக்கு மாறியது போன்ற விஷயங்களைக் குறித்தும் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். " தாயம் ஆடுவதில் காய்களை வெட்டுவது உண்டு, களங்களும் அதுதான், இது கலைஞர் கருணாநிதியின் எழுத்து... " களமும் அதுதான்" " அரசியலும் அதுதான்" அரசியலில் செண்டிமெண்டை விட சாமர்த்தியமும், சாதுர்யமும் வேண்டும்.

இது அரசியலுக்கு மிகவும் அவசியம். மக்கள் பணி செய்வது என்று வந்து விட்டால் இங்கு சாதுரியம் மிகவும் முக்கியம். கலைஞர் கருணாநிதியிடம் சாதுரியம் இருந்தது அதுபோன்ற ஒரு சாதுர்யத்தைதான் செந்தில் பாலாஜியிடம் நான் பார்க்கிறேன். காய்களை நகர்த்தும் போதே காயை பழமாக்குவது எப்படி என்று செந்தில்பாலாஜிக்கு தெரிந்திருக்கிறது என பார்த்திபன் பேசினார். அவரது பேச்சு அங்கிருந்தவர்களை மிகுந்த உற்சாகப் படுத்துவதாக இருந்தது.
