தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே இனி பிரதமர் மோடி தான் அம்மா என்று தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார். மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே பாஜக மகளிர் அணி சார்பாக 'தமிழ்மகள் தாமரை மாநாடு' நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பாஜகவின் தேசிய மகளிரணி தலைவி விஜயரகத்கர், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

மாநாட்டில் முதலில் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் பாஜக ஆட்சி நடைபெற வேண்டும் என்ற எண்ணம், மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகம் தாமரையை நோக்கி வந்து கொண்டிருப்பதாக கூறிய அவர், பாஜக ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்தில் மதுவை முழுமையாக ஒழிக்க முடியும் என்றார். 

பிறகு பேசிய தமிழிசை ஒரு பெண் நினைத்தால் தமிழகத்தின் சரித்திரத்தையே மாற்றி அமைக்க முடியும் என்றார். சென்னையில், மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி 17 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவதை சுட்டிக் காட்டிய அவர், இதுபோன்ற குற்றவாளிகள் கடந்த ஆட்சியில் தப்பித்து வந்ததாவும், பாஜக ஆட்சியில் அவர்களுக்கு தூக்கு தண்டனை கிடைக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெண்களுக்கு கொடுத்து இருக்கிற திட்டங்களை பட்டியலிட்ட தமிழிசை. நம் நாடு பெண்ணை, நதியை, மண்ணை தாயாகப் பார்க்கும் நாடு என்றார். தமிழகத்தில் தாமரை மலரும். பெண்கள் என்றால் மென்மையானவர்கள் என்று கணக்குப் போடுகிறவர்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன். இங்கு கூடி இருக்கிற வலிமையான பெண்களால் தமிழகத்தில் தாமரை ஆட்சி மலரும் என்றார். மேலும் தமிழகத்திற்கு அம்மா இனி மோடிதான் எனக் கூறியுள்ளார்.