நான் மகிழ்ச்சியாகவே இருக்குகிறேன். இங்கு தமக்கு எந்த பிரச்சனையும் இல்லை என நடிகரும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும் குஷ்பூ கூறியுள்ளார். 

கடந்த, 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கு முன், காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்புவுக்கு, சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை. இதனால், அவர் அதிருப்தியில் இருப்பதாகவும், விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகின. இதை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது உடனே விரைவில் குணமடைய இறைவனை வேண்டுவதாகவும், அவர் விரைவில் வீடு திரும்ப வாழ்த்துக்கள் என்ற குஷ்பூ தெரிவித்திருந்தார்.

மேலும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து குஷ்பூ கருத்து தெரிவித்திருந்ததால், கட்சித் தலைமை அவர் மீது அதிருப்தியில் இருந்தது. சில தினங்களுக்கு முன் குஷ்புவின் கணவர் சுந்தர் சி தமிழக பாஜக தலைவர் முருகனை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. அடுத்த சில நாட்களில், டெல்லியில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து இணைய இருப்பதாகவும் கூறப்பட்டது.  

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஷ்பூ;- காங்கிரஸில் நான் மகிழ்ச்சியாகவே இருக்குகிறேன். இங்கு தமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அமித் ஷா நாட்டுக்கே அமைச்சர்தானே? அதன் காரணமாக கட்சிக்கு அப்பாற்பட்டு அவர் நலமடைய வேண்டும் என தெரிவித்தேன். அதற்காக, உடனே நான் பாஜகவில் இணைய இருப்பதாக, ஒரு ட்விட்டருக்கு இரண்டு ரூபாய் வாங்கிக் கொண்டு வதந்தி பரப்புகின்றனர். எனது டெல்லிப் பயணம் இவ்வளவு பெரிதாக்கப்படும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.