விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தனக்கு விருந்து வைத்த போது அவரது மனைவி இட்லிக்குள் கறி வைத்து கொடுத்தார் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியுள்ளது கேலிக்குறியதாகி இருக்கிறது. 

 

இதுகுறித்து, #இட்லி_கறி_சீமான் என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி சீமானுக்கு எதிராக பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். அதில், பத்திரிக்கையாளர் ஜோ.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கருத்தில், ‘’தமிழகத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதும், அதன் தலைவர் பிரபாகரன் மீதும் ஆதர்சமும், பற்றும் பலருக்கு இருப்பதைப்போல, கடுமையான விமர்சனங்களும், வெறுப்பும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. ஆனால், ஒருபோதும் விடுதலைப் புலிகள் இயக்கமும், தலைவர் பிரபாகரனும் தமிழகத்தில் கேலிக்குரிய அமைப்பாக, தலைவராக பேசப்பட்டதில்லை; கருதப்பட்டதில்லை.

 

அந்த நிலையை அடியோடு மாற்றி, புலிகள் அமைப்பை கேலிக்குரிய அமைப்பாகவும், தலைவர் பிரபாகரனை கேலிக்குரிய நபராகவும் மாற்றிய பாதகத்தைச் சீமான் திறமையாகச் செய்து முடித்திருக்கிறார். தமிழகத்தில்-இந்தியாவில் உள்ள சிங்கள ஆதரவாளர்கள்கூட அந்தப் பாதகத்தைச் சீமான் அளவுக்குச் செய்யவில்லை’’ எனத் தெரிவித்துள்ளார்.