தமிழகத்தில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் ஏரி, குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் மற்றும் அதன் பராமரிப்பு பணிகளை விரைந்து  முடிப்பதுடன், நீர் நிலைகளுக்கான வரத்து கால்வாய்கள் தூர்வாரப்பட்டு ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாமல் சேகரிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் அதை தடுக்க மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுடன் எதிர்வரும் மழை காலத்தை முன்னிட்டு இனிவரும் காலங்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாமல் அதை நீர்நிலைகளில் சேகரிக்கும் வண்ணம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில், அவரது முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது. 

அதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் மற்றும் பேரூராட்சிகளின் இயக்குனர், நகராட்சி நிர்வாக ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் அக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசியதாவது:- தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இவ்வொரு துளி மழை நீரையும் வீணாக்காமல் சேர்த்து வைக்கும் வகையில் அனைத்து இல்லங்கள் மற்றும் அரசு கட்டடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளில் மழைநீர் எளிதில் செல்லும் வகையில் உள்ளனவா? எனவும் அடைப்புகள் இருந்தால் அவற்றை சரிசெய்ய உடனடியாக உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் சரியான முறையில் பயன்பாட்டில் உள்ளனவா? எனவும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். 

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 210 நீர்நிலைகள் கண்டறியப்பட்டு மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் பணிகள் முடிவுற்ற  நீர்நிலைகள் தொடர்ந்து நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மற்ற மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள 585 ஏரி, குளம், குட்டைகள் பேரூராட்சிகளில் உள்ள 2,366 ஏரி,குளம், குட்டைகள். கிராம ஊராட்சிகளில் உள்ள 68 ,173 ஏரி குளம் குட்டைகள் போன்ற நீராதாரங்களில் கடந்த ஆண்டு முதலே பராமரிப்பு பணிகள், கரைகளை சீரமைக்கும் பணிகள், தூர்வாரும் பணிகள் போன்றவை நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் வரத்து கால்வாய்கள் தூர்வாரப்பட்டு ஒரு சொட்டு நீர்கூட வீணாகாமல்  சேகரிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பான விவரங்களை 15 நாட்களுக்குள் அறிக்கையாக தலைமையிடத்திற்கு தெரிவிக்க வேண்டுமென மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்கள் உத்தரவிட்டார்.