ஊரடங்கு நடைமுறையில் இருந்து வரும் நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு கூட்டம் கூட்டமாக ரயில் மூலம் திரும்பி வரும் நிலையில் ,  கேரள மாநிலத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் பலர் கேரளாவிலேயே  இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.  கேரள மாநிலத்தில் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 50 ஆயிரம் பேர் வரை பல்வேறு தொழில்களில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.  இவர்களில் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்களும் கணிசமாக உள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில்  பிற மாநிலங்களில் பணியாற்றிய அசாம் மாநிலத்தவர் எல்லாம் சொந்த ஊருக்கு திரும்பி விட்ட நிலையில் கேரளத்தில் இருக்கும் அசாம் மாநில தொழிலாளர்கள் மட்டும் ஊருக்கு செல்ல விரும்பவில்லை  என்று கூறியுள்ளனர். கேரளா அரசை பொறுத்தவரை தொடக்கம் முதலே புலம்பெயர் தொழிலாளர்களுக்கு போதிய வசதிகளை செய்து கொண்டிருக்கிறது. 

தங்குவதற்கு இடவசதி , அவர்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு  வழங்குவது ,  தொழிலாளர்களின் செல்போன்களுக்கு  ரீசார்ஜ் செய்வது,  பொழுதுபோக்கு அம்சங்களை அளிப்பது என மிகுந்த அக்கறையுடன் பல ஏற்பாடுகளை செய்துள்ளது,  இதனால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வெளி மாநிலத்தில் தங்கி இருக்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல் மிகுந்த நம்பிக்கையுடன் கேரளாவில் தங்கியுள்ளனர். இந்தப் பின்னணியில்தான் தற்போது கொரோனா காலத்தில் அவர்கள் சொந்த ஊர் திரும்ப  விரும்பவில்லை என்பது தெரியவந்துள்ளது . அதிகாரிகள் அவர்களை அணுகி சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறோம் என்று கூறியும் ,  அசாம் தொழிலாளர்கள் அதனை மறுத்து விட்டதாக கூறப்படுகிறது .  

இதுதொடர்பாக கேரளாவில் வேலை செய்துவரும் அசாமின் தீமாஜி மாவட்டத்தைச் சேர்ந்த திம்பேஸ்வர் பருஹா என்பவர், ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் இங்கே நன்றாக இருக்கிறோம் அசாமிற்கு திரும்பச் செல்ல விருப்பமில்லை,  எங்கள் முதலாளி இதுவரை ஒருமுறை கூட சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்லுங்கள் என கூறவில்லை ,  எங்கள் சம்பளத்தை சரியாக அளித்து வருகிறார் , தேவையான உணவையும் வழங்கி கொண்டிருக்கிறார் மேலும் கேரள டிஜிபி தனது செல்போன் எண்ணை அளித்துள்ளார், எந்த நேரத்திலும் உதவிக்காக அழைக்கலம் என கூறியுள்ளார் . போலீசார் அவ்வப்போது எங்களையும் நலம் விசாரித்து வருகின்றனர் .  உள்ளூர் மக்களும் எங்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கின்றனர் எனக் கூறியுள்ளார்.  அசாம் உட்பட வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்த 40,000 முதல் 50,000 பேர் வரையிலான தொழிலாளர்கள் இன்னும் கேரளாவில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .