எங்களை யாரும் பிரிக்க முடியாது என்றும் அணிகள் இணைந்ததற்கு அம்மாவின் ஆன்மா வழிவகுத்தது என்றும் தொண்டர்களின் விருப்பத்துக்கேற்பவே அணிகள் இணைப்பு ஏற்பட்டது என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

நீண்ட இழுபறிக்கு பிறகு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இன்று இணைந்தன. அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த இணைப்பு நடைபெற்றது. 

அதிமுகவின் இரு அணிகளும் இணையும் என எதிர்பார்த்திருந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை கழகம் வந்தார். அவரை தொடர்ந்து பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் வந்தார்.

6 மாத காலத்துக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் தலைமை கழகத்துக்கு வந்தார். அப்போது, அணிகள் இணைப்பு நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியில் கைகுலுக்கிக் கொண்டனர்.

பின்னர் பேசிய ஓ.பன்னீர்செல்வம், நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று கூறினார். மேலும், அணிகள் இணைந்ததற்கு அம்மாவின் ஆன்மா வழிவகுத்துள்ளது.

உலக அரங்கில் அதிமுக சரித்திரத்தை உண்டாக்கி உள்ளது. சிறிய இடைவெளிக்குப் பிறகு, சில கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு நாம் ஒன்று சேர்ந்துள்ளோம்.

எங்களை யாரும் பிரிக்க முடியாது. நாங்கள் புரட்சி தலைவி அம்மாவின் பிள்ளைகள். அதிமுக தொண்டர்களின் ஏக்கத்தை நிறைவேற்றி உள்ளோம். 

இன்று நாம் இணைந்திருக்கிறோம். இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்த எடப்பாடி பழனிசாமி, தாய் கழக நிர்வாகிகள், கழக பொறுப்பாளர்கள், மூத்த முன்னோடிகள், அமைச்சர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

மனதில் இருந்த பாரம் இன்றுடன் குறைந்து விட்டது. எதிர்க்கும் கட்சிகளை எதிர்கொள்ள இந்த இணைப்பு வரலாற்று பாடமாக விளங்கும். அதிமுகவின் சாதாரண தொண்டனாக இருந்து கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.