Nobody calls me Congress by Kushboo

தமிழக காங்கிரஸில் இரட்டை குழல் துப்பாக்கியாக அடிபடுவது இளங்கோவன் மற்றும் குஷ்பு இருவரும்தான். இளங்கோவனை வளரவிட்டால் போனஸாக குஷ்புவும் வளர்ந்து விடுவார் என்று அஞ்சும் ஒரு டீம் இருவருக்கும் சேர்த்து ரிவிட் வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தன்னை யாருமே கண்டுகொள்வதில்லை என்று புலம்பிக் கொட்டியிருக்கிறார் குஷ்!

தி.மு.க.வில் கோலோச்சிவிட்டு, மேலிடத்துடன் ஏற்பட்ட உள் மோதலில் வெளியேறிய குஷ்பு நேரடியாக காங்கிரஸில் இணைந்தார். வந்த மாத்திரத்தில் அவருக்கு ராகுல்காந்தி தேசிய பதவி கொடுத்ததை மகளிர் காங்கிரஸார் விரும்பவேயில்லை. இது போதாதென்று அப்போது தமிழக தலைவராக இருந்த இளங்கோவன் குஷ்புவுக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவதாக கடும் விமர்சனம் கிளம்பியது.

இந்நிலையில் இளங்கோவன் இறக்கிவிடப்பட்டு, தலைவர் பதவியில் திருநாவுக்கரசர் அமர்த்தப்பட்டார். இதன் பிறகாவது இளன்கோவன் மற்றும் குஷ்பு இருவர் மீதான விமரசன தாக்குதல் குறையுமா? என்று பார்த்தால், இல்லை. கடந்த வாரம் வரையிலும் கூட இருவரும் மிக மோசமாக வறுத்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். ‘மாநில தலைவராக இருந்தபோது இளங்கோவன் சுருட்டிய கோடிகளில் சுமார் அரைக்கோடியை குஷ்புவிடம் தான் கொடுத்தார்.’ என்று கராத்தே தியாகரான சமீபத்தில் கொளுத்திய பட்டாசு காது கிழிய வெடித்துக் கொண்டிருக்கிறது.

திருநாவுக்கரசர் தமிழக காங்கிரஸின் தலைவராக நெடுங்காலம் இருந்துவிட்ட நிலையில் அவர் விரைவில் மாற்றப்படலாம் என்று இளங்கோவன் திரி கொளுத்தியதை கூட. ’அதற்கு வாய்ப்பே இல்லை’ என்று சொல்லி அணைத்துவிட்டனர் சக நிர்வாகிகள். தலைவர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் இளங்கோவன் வரக்கூடாது. அவர் வந்தால் களப்பணியே இல்லாமல் பவுடர் கலையாமல் பாலிடிக்ஸ் செய்யும் குஷ்புவும் வந்துவிடுவார்! என்று வெளிப்படையாகவே போட்டுத் தாக்குகின்றனர் கதர்கள்.

இந்நிலையில் தமிழக காங்கிரஸில் தனது பரிதாப நிலை குறித்து இப்போது புலம்பியிருக்கிறார் குஷ்பு. அதில் “ஈ.வி.கே.எஸ். அவர்கள் தலைவரா இருந்தப்ப கட்சியின் நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள் எனக்கு வந்துடும். நானும் அதில் கலந்துகிட்டு பேசி கட்சியை வளர்ப்பேன். அதனால என் அரசியல் சுறுசுறுப்பா இருந்துச்சு. ஆனா இப்போ யாரும் என்னை கூப்பிடுறதில்லை. எனக்கு கட்சி நிகழ்ச்சிகள் பற்றி எதையும் தெரிவிக்கிறதில்லை.

சத்தியமூர்த்தி பவன் என் கட்சியின் அலுவலகம்தான் . ஆனால் நான் அங்கே போக முடியாது. எனக்கு அங்கே என்ன நிகழ்ச்சிகள் நடக்குதுன்னு எந்த அறிவிப்பும் வராது. எதுவும் தெரியாமல் அங்கே போயிட்டு நான் என்னதான் பண்ணப்போறேன்?” என்று சொல்லியிருக்கிறார்.

ஆக ராகுல்காந்தியால் நேரடியாக தேசிய பதவியில் நியமிக்கப்பட்ட குஷ்பு, தமிழக காங்கிரஸின் உள் மோதலால் மிக மோசமாக புறக்கணித்து, தள்ளிவைக்கப்படுகிறார் என்பது துல்லியமாக புலனாகியிருக்கிறது. இது குஷ்புவுக்கு இளைக்கப்படும் பெரும் அநீதியாக பார்க்கப்படும் அதே வேளையில், தேசிய பதவியிலிருக்கும் குஷ்பு ‘எங்க கட்சி அலுவலகத்துக்கு போயி நான் என்ன பண்னப்போறேன்?’ என்று கேட்பதையும் கடுமையாக விமர்சிக்கின்றனர் பார்வையாளர்கள்.

’நிகழ்ச்சி இருந்தால் கலகலன்னு கலர்ஃபுல்லாக போயி உட்காருவேன். நிகழ்வுகளே இல்லேன்னா அங்கே போயி நான் என்ன பண்ணப்போறேன்? அப்படின்னு குஷ்பு கேட்கிறது அவருடைய பண்ணையார் அரசியல் குணத்தை காட்டுகிறது. தொண்டர்களை அரவணைத்து இழுத்துச் சென்று அரசியல் செய்ய ஆயிரத்தெட்டு காரணங்கள் இருக்கையில் அப்படி தூசி படியும் களப்பணியை செய்ய குஷ்பு தயாரில்லை என்பது புலனாகிறது. ஆக அவர் இப்படி ஒதுக்கிவைக்கப்படுவதும் சரிதான் போல!’ என்கிறார்கள்.