தமிழக அரசியலில் இருந்த வெற்றிடத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினி 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக கட்சித் தொடங்கி அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும் ரஜினி பேசிவருகிறார். சில தினங்களுக்கு முன்புகூட செய்தியாளர்களிடம் பேசும்போதும், தமிழகத்தில் இன்னும் சரியான, ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது என ரஜினி தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. 

இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், நீர் மேலாண்மை விஷயத்தில் தமிழக அரசு குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது. எடப்பாடி அரசின் மெத்தன போக்கால் கர்நாடகம் தென்பெண்ணையில் 70 சதவீத அணை கட்டும் பணிகளை முடித்துவிட்டது. இது குறித்து தமிழக அரசு தீர்ப்பாயத்தை அணுகாதது ஏன் என நீதிமன்றமே கேள்வி எழுப்பியது. அதற்கு தமிழக அரசிடமிருந்து எவ்வித பதிலும் இல்லை. இத்திட்டத்தினால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகும்.

மேலும், தமிழகத்தில் வெற்றிடம் என்பது இல்லை என்ற வைகோ, கலைஞர் மறைவால் தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டார். வலுவான கூட்டணி அமைத்து 39 தொகுதிகளை வென்று தனது ஆளுமையை, தலைமை பண்பை நிரூபித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க உடன் ம.தி.மு.க கூட்டணி தொடரும் எனத் தெரிவித்தார்.