No Ulundhu doll in ration shops in tamilnadu

கடுமையாக விலை உயர்ந்துள்ளதால் இனி ரேஷன் கடைகளில் உளுந்தப்பருப்பு விநியோகம் இருக்காது என சட்டப் பேரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள ஏழை-எளிய மக்கள் அதிகம் நம்பி இருப்பது ரேஷன் கடைகளைத்தான். இலவச அரிசி , சர்க்கரை, எண்ணெய், பருப்பு, உளுந்தம்பருப்பு கோதுமை உள்ளிட்டவைகள் இங்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இலவசமாகவும் , விலை குறைவாகவும் இப்பொருட்கள் வழங்கப்பட்டு வருவதால் ஏழை-எளிய மக்கள் ரேஷன் கடைகளை பெரிதும் நம்பி வாழ்கின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலை கிலோவுக்கு ரூ.13.50-ல் இருந்து ரூ.25 ஆக உயர்த்தப்பட்டது.

இதனால் பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். உணவு பாதுகாப்புத் திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்ட பிறகு மத்திய அரசு ரேஷன் பொருட்களுக்கு வழங்கி வந்த மானியத்தை ரத்து செய்தது.

இது போன்ற பிரச்சனைகள் எழும் என்பதால்தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசு கொண்டுவந்த உணவு பாதுகாப்புத் திட்டத்தை கடுமையாக எதிர்த்து வந்தார். ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு மத்திய அரசின் இத்திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டது.

அண்மையில்தான் சர்க்கரை விலை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது, தற்போது ரேஷன் கடைகளில் இனி உளுந்தம் பருப்பு வழங்கப்பட மாட்டாது என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு அறிவித்தார்.

இந்த அறிவிப்பு பொது மக்கள் மற்றும் ஏழை-எளிய மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.