மகாராஷ்டிராவில், பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தேவேந்திர பட்னவிஸ்  முதலமைச்சராக உள்ளார். சிவசேனா கட்சியின் நிறுவனர், மறைந்த, பால் தாக்கரேவின் உறவினரான ராஜ் தாக்கரே, மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா என்ற கட்சியை நடத்தி அந்த மாநிலத்தில் நடத்தி வருகிறார்.


ராஜ் தாக்கரேவின் மகன் அமித் தாக்கரேவுக்கு வரும்  27 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் திருமணம் நடக்க உள்ளது. அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு, திருமண அழைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

மஹாராஷ்டிரா முதலமைச்சர்  தேவேந்திர பட்னவிஸ், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி உட்பட, பல மூத்த, பாஜக மூத்த தலைவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

ஆனால்,பிரதமர் நரேந்திர மோடிக்கு,திருமண அழைப்பிதழ் வழங்கப்படவில்லை. இது மகாராஷ்ட்ரா மாநில பாஜகவை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இதையடுத்து, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுடன், காங்கிரஸ் கட்சி  கூட்டணி அமைக்கப் போவதாக பேச்சு எழுந்தது.  ஆனால் திருமண அழைப்பிதழ் வழங்கியதற்கும், கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என, காங்கிரஸ் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.