No teacher was killed in the fight - Minister Jayakumar

ஜாக்டோ ஜியோ போராட்டத்தன்போது தஞ்சை அரசு பள்ளியில் பணிபுரிந்து வந்த தியாகராஜன் திடீர் மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் போராட்டத்தில் ஆசிரியர் யாரும் இறக்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமர் கூறியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழக அரசு பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்திருந்தனர். இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க சென்னை புறப்பட்ட ஆசிரியர்களை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.

இன்று காலை சென்னை வாலாஜா சாலை, அண்ணா சாலை மற்றும் காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஒன்றுகூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், பங்கேற்ற ஆசிரியர்களை போலீசார் கைது செய்து, எழும்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அடைத்து வைத்தனர். இந்த நிலையில்,அந்தப் பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தஞ்சை பாபநாசத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் தியாகராஜன் திடீரென மரணமடைந்துள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளியான அவர், பாபநாசம் பள்ளியில் சிறப்பு ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். தியாகராஜனின் திடீர் மரணம் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுதான் இந்த மரணத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு அமைக்கும் என்று 100 சதவீதம் நம்பிக்கை இருக்கின்றது என்றார். மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக இருப்பதால், காவிரி உட்பட தமிழக உரிமைகளை விட்டுக் கொடுப்பதாக அர்த்தமில்லை. காவிரி விவகாரத்தில் மத்திய அரசை நம்பவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்றார்.

ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்த கேள்விக்கு, அரசாங்கத்தின் கஷ்டத்தை அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி 14,000 கோடி ரூபாய் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. ஊதிய முரண்பாடு குறித்து ஆராய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாகவும் கமிட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கமிட்டிகள் அளிக்கும் பரிந்துரைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர் யாரும் இறக்கவில்லை. ஆணவம் இல்லாத அரசுதான் தமிழக அரசு என்பதை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். அரசுக்கு 100 ரூபாய் வருவாய் என்றால், அதில் 70 ரூபாய் அரசு ஊழியர்களுக்காகவே செலவு செய்யப்படுகிறது. இதனைப் புரிந்து கொண்டு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.