no side effect when taking nilavembu kashayam said dr sivaraman
நிலவேம்புக் குடிநீரால் எந்த விதமான ஆபத்தும் நிச்சயம் வராது என்றும், அது மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்று பரப்பப் படும் தகவல் பொய்யானது என்றும் சித்த மருத்துவர் சிவராமன் விளக்கம் அளித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இதுகுறித்து பேட்டி அளித்த அவர், “திடீரென நிலவேம்பு கசாயம் குறித்து வதந்தி பரப்பப்படுகிறது. நிலவேம்பு பொடியிலுள்ள 9 மூலிகைகளில் அக்ரோஸ் என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு, அதனை எலிக்குக் கொடுத்து சோதித்தார்களாம். அதன் அடிப்படையில் அது மலட்டுத்தன்மையை உண்டாக்கும் என்று ஒரு பூதாகரமான பொய்யைப் பரப்பி வருகின்றார்கள்.
மெத்தனாலிக்கில் இருந்து எடுக்கப்படும் எக்ஸ்ட்ராக்ட், அல்லது அக்ரோஸில் இருந்து பெறப்படும் அதன் எக்ஸ்ட்ராக்ட் இவற்றால் வரக்கூடிய மூலத்தையும், 9 மூலிகைகளையும் கொண்டு காய்ச்சப்படும் கசாயத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது.
கசாயம் என்பது 5 அல்லது 7 நாட்களுக்கு ஒரு முறையோ , 1 அல்லது 2 நாட்களுக்கு ஒருமுறையோ பரிந்துரைக்கக்கூடிய சித்த மருந்துவ முறையில் தரப்படும் ஒரு மூலிகை மருந்து. எனவே இதில் எந்த விதமான ஆபத்தும் வராது” என்று விளக்கிக் கூறியுள்ளார்.
முன்னதாக, நிலவேம்புக் குடிநீர் குறித்து நடிகர் கமலஹாசன் தான்தோன்றித்தனமான வகையில் கருத்தைக் கூறி பொதுமக்களிடையே ஒரு பீதியை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது. அவருக்கு பதிலளிக்கும் வகையிலேயே மருத்துவர் சிவராமன் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.
