தமிழகத்தில்  இந்து சமய அறநிலையத்துறையின்  கட்டுப்பாட்டில் உள்ள 36,000 கோயில்களில் வணிக நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள  கடைகளை அகற்ற  உடனடியாக நடவடிக்கை எடுக்க  வேண்டும் என  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த மாதம் நிகழ்ந்த தீ விபத்தில் 36 கடைகள் எரிந்து சாம்பலாயின. மேலும் வசந்தராயர் மண்டபம் உள்ளிட்ட புராதன சின்னங்களும் எரிந்தன. இதனால் பொது மக்களும், பக்தர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த விபத்தைத் தொடர்ந்து கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது

இந்நிலையில் பழனி அடிவாரத்தில் திருகோவிலுக்கு சொந்தமான மங்கம்மாள் சத்திரத்தில் உள்ள கடைகளை காலி செய்யுமாறு, இணை ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்  கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 7 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி சுப்பிரமணியம், கோயில் வளாகத்தில் தொடர்ந்து கடை நடத்த வேண்டும் என கேட்க எந்த சட்ட உரிமையும் இல்லை என்றார். மேலும் தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 36 ஆயிரம் கோவில்கள் அனைத்தையும் பராமரிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்ற நீதிபதி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் வளாகங்களில் வணிக நோக்கத்திலான கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து கோயில் செயல் அலுவலர்களுக்கும், அறநிலையத்துறை செயலர், அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டுமென உத்தரவிட்டார்.