உங்களது மகன்களுக்கு சீட் கொடுத்தால், உங்களுக்கு இடம் இல்லை, என சீட் கேட்டுச் சென்ற அமைச்சர்கள், தலைவர்களிடம் கட்சித் தலைமை கறாராகத் கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் தீவிரமாக தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஏறக்குறைய அதிமுகவில் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு ஆரம்பித்து முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் அதிமுக தலைமை தங்களது கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த வேட்பாளர் தேர்வில் தான் அதிமுக நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்துள்ளது. வழக்கமாக மூத்த நிர்வாகிகள் பெரும்பாலோனோர் தங்களுக்கு அடுத்து அவர்களின் வாரிசை அரசியலில் களமிறக்குவது வழக்கமானது தான். கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத், அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தன், மதுரை வடக்கு எம்எல்ஏ ராஜன்செல்லப்பா மகன் ராஜ்சத்யன் உள்ளிட்டோர் களமிறக்கினர்.

அதேபோல் வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அமைச்சர்கள், 2-ம் கட்டத் தலைவர்கள் தங்களது வாரிசுகளுக்கும் சீட் கேட்டு தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். கடந்த மக்களவைத் தேர்தலில் நின்று தோற்ற வாரிசுகள் இருவருக்கும், இம்முறையும் சீட் கேட்டு வருகின்றனர். இதுதவிர ஓ.பன்னீர்செல்வத்தின் 2-வது மகன் ஜெயபிரதீப் மற்றும் அமைச்சர்கள் ஜி.பாஸ்கரன், திண்டுக்கல் சீனிவாசன், திருச்சி வெல்லமண்டி நடராஜன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்டேரின் வாரிசுகளுக்கும் சீட் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் கோபம் அடைந்த அதிமுக தலைமை, இந்த தேர்தலில் வாரிசுகளுக்கு சீட் கிடையாது. மேலும் உங்களது மகன்களுக்கு சீட் கொடுத்தால், உங்களுக்கு இடம் இல்லை, என சீட் கேட்டுச் சென்ற அமைச்சர்கள், தலைவர்களிடம் கட்சித் தலைமை கறாராகத் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.