No rights to talk about admk by bjp told sellur raju
நோட்டாவை விட குறைவான வாக்குகள் வாங்கிய பாஜகவுக்கு அதிமுகவை விமர்சிக்கும் தகுதி இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கும்பின் அதிமுக – பாஜக இடையே சுமூகமான உறவு இல்லை என்றே கூற வேண்டும். இந்த இரு கட்சித் தலைவர்களும் தற்போது ஒருவரை ஒருவர் தாக்கி பேசத் தொடங்கியுள்ளனர்.
அண்மையில் சென்னை விமான நிலையத்தில் பேசிய நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழகத்தில் இனி தேசிய கட்சிகளூககு இடமில்லை என தெரிவித்தார். தேசிய கட்சிகளுக்கும், திராவிட கட்சிகளுக்கும் இடையே போட்டி என்பதே இல்லை என்றும். தேசிய கட்சிகளுக்கும், நோட்டாவுக்கும்தான் போட்டி என்றும் பாஜகவை கலாய்த்தார்.

இதே போன்று நோட்டா அளவுக்குகூட வாக்குகளை வாங்க முடியாத பாஜக அதிமுகவிக்கு போட்டியாக கருத முடியாது என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகை செல்வன் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தம்பிதுரையை துணை சபாநாயகராக்கியது யார் என்பதை அவர் நினைத்துப் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.
இதே போன்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேசும்போது, தேர்தலில் வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அதை நிறைவேற்றமுடியாமல் தவிக்கும் அதிமுக, பாஜக குறித்து பேசக்கூடாது என கடுமையாக தெரிவித்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழகத்தில் அதிமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறும் பாஜக, அவர்கள் அறிவித்த அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றி விட்டார்களா என கேள்வி எழுப்பினார்.
நோட்டாவைவிட குறைவான வாக்குளைப் பெற்றுள்ள பாஜகவுக்கு எங்களை விமர்சிக்கும் தகுதி இல்லை என்று தெரிவித்தார். பாஜக எங்கள் மீது ஒரு துரும்பை வீசினால், நாங்கள் ஒரு துணயே வீசுவோம் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததாக சங்கரமடம் விளக்கம் அளித்தபின்பு , அது குறித்து பேச விரும்கவில்லை என கூறினார். மேலும், நடிகர் கமலஹாசன் நாளை நமதே பயணம் தொடங்கிய பின்பு, எப்படி அவருக்கு வரவேற்பு இருக்கிறது என்பது குறித்து கருத்துத் தெரிவிப்பதாக அமைச்சர் செல்லுர் ராஜு தெரிவித்தார்.
