திமுகவுக்கு எந்தவித பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை..அமைச்சர் எ.வ.வேலு..!
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடந்து வருகிறது. பல்வேறு புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
![No retaliatory action...Minister EV.Velu No retaliatory action...Minister EV.Velu](https://static-gi.asianetnews.com/images/01ctqdq67tkwsnmhky0kxs4200/E-V-Velu_363x203xt.jpg)
புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தப்பட்டது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நேற்று காலை திடீரென அதிரடி சோதனை மேற்கொண்டனர். சுமார் 12 மணிநேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்றது. எஸ்.பி வேலுமணி அமைச்சராக இருந்தபோது மாநகராட்சி ஒப்பந்த பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பல கோடி மோசடி செய்ததாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், இந்த சோதனை நடைபெற்றது. இதில், ரூ.13 லட்சம் ரொக்க பணம், நிதி பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள், ரூ.2 கோடி வைப்பு தொகைக்கான ஆவணங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
மேலும், குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கூறி, எஸ் பி வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன், ஜேசிபி பொறியாளர்கள் கே.சந்திரபிரகாஷ், ஆர்.சந்திரசேகர், ஆர்.முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா உள்ளிட்ட 17 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தொடர்புடைய 10 நிறுவனங்களின் மீதும் வழக்கு பதிவாகியுள்ளது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. திமுக அரசு மக்கள் பணியில் கவனம் செலுத்தாமல் அதிமுகவை பழிவாங்குவதிலேயே குறியாக இருக்கிறது என்று அதிமுக, பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு;- முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடந்து வருகிறது. பல்வேறு புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றம்சாட்டப்படுகிறது. இதில் எந்தவித பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. புகாரின் அடிப்படையில் சட்டத்தின்படியே லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தியுள்ளனர் என்று எ.வ.வேலு கூறினார்.