எந்த தொகுதியிலும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்து கோரிக்கை வரவில்லை என தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்று அறுதிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களுக்கு தகவல் அளித்தார். அப்போது கூறிய அவர், 234 தொகுதிகளுக்கான வெற்றி பெற்றவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் அதற்கு அவர்கள் எடுக்கும் முடிவின் அடிப்படையில் தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஆளுநருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், இன்று மாலைக்குள் பணிகள் நிறைவு பெற்ற பின் அறிக்கை அளிக்கப்படும் என்றார். எந்த தொகுதியிலும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்து கோரிக்கை வரவில்லை என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.