சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என முடிவு செய்து அவர்களை அதிமுக ஒதுக்கி வைத்திருக்கும்போது, மறைந்த நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

கடும் நெஞ்சுவலி காரணமாக சென்னை  பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான நடராஜன், நேற்று அதிகாலை மரணமடைந்தார்.

இதையடுத்து  அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.  திமுக செயல் தலைவர் ஸ்டாலின், வைகோ,வீரமணி, பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து  அவரது உடல் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தஞ்சையில் நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய சீமான், அதிமுகவில் இருந்து யாருமே அஞ்சலி செலுத்ததாதற்கு வேதனை தெரிவித்தார். ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் அரசியல் பண்பாடு இல்லாதவர்கள் என குற்றம் சாட்டினார்.

சீமானின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயகுமார், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என முடிவு செய்து அவர்களை அதிமுக ஒதுக்கி வைத்திருக்கும்போது, மறைந்த நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை என தெரிவித்தார்.

நாங்கள் மட்டுமல்ல எந்த உண்மையான அதிமுக தொண்டர்களும் நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தமாட்டார்கள் என அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.