அதிமுகவில் சசிகலா – ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகளாக செயல்படுகின்றன. இதில், ஓ.பி.எஸ். தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என 11 எம்எல்ஏக்களும், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்க வேண்டும் என 124 எம்எல்ஏக்கள் கூறினர்.
இதற்கிடையில், சசிகலா தரப்பில் உள்ள எம்எல்ஏக்கள் எம்பிக்கள், ஓ.பி.எஸ். அணிக்கு தாவினர். இதனால், அனைத்து எம்எல்ஏக்களையும் கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் பகுதியில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். இதனால், அங்கு தங்கிய எம்எல்ஏக்களை, அவர்களது உறவினர்களும், தொகுதி மக்களும் சந்திக்க முடியாமல் போனது. இதையொட்டி அனைத்து தரப்பினரும் அதிருப்தி அடைந்தனர்.
இதைதொடர்ந்து, கடந்த 18ம் தேதி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்தார். இதற்கு, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதனால், சட்டமன்றத்தில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து திமுக உள்பட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். இதை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, இ.பி.எஸ். முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக, நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொண்ட எம்எல்ஏ, எம்பிக்களுக்கு தொகுதி மக்களும், அதிமுக தொண்டர்களும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வசைபாடினர். இதனால், சொந்த ஊர் திரும்பி எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வெளியே தலை காட்ட முடியாமல், உள்ளனர். இதையொட்டி எம்எல்ஏக்கள், எம்பிக்களுக்கு அரசு சார்பில் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விருது நகர் தொகுதி அதிமுக எம்.பி ராதாகிருஷ்ணனுக்கு, அரசு சார்பில் வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை வேண்டாம் என மறுத்துவிட்டார்.
என்னை தேர்ந்தெடுத்தது மக்கள்தான். அவர்கள், என்னை பற்றி புரிந்து கொள்வார்கள். மக்களின் ஆதரவும், பாதுகாப்பும் எனக்கு இருக்கும்போது, போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என கூறிவிட்டார்.
