காவிரி விவகாரத்தில் மத்திய பாஜக அரசு அரசியல் விளையாட்டு நடத்துகிறது என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முதலமைச்சருமான  சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

ஆந்திரமாநிலத்துக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்காததைக் கண்டித்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி அண்மையில் விலகியது.

இந்நிலையில், டெல்லிக்கு வந்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் சுதீப் பந்தோபாத்யாய, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜா, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, அதிமுக எம்.பி. வி.மைத்ரேயன், சமாஜவாதி மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.

அப்போது, மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு கோரினார். இதைத் தொடர்ந்து, டெல்லி முதலமைச்சர்  அரவிந்த் கேஜரிவாலை சந்தித்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அப்போது தெலுங்கு தேசம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் இரு அவைகளிலும் உள்ள ஆம் ஆத்மி எம்பிக்கள் அதற்கு ஆதரவு அளிப்பார்கள் என கேஜரிவால் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலம் ன் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு திறந்து விடப்படும் கிருஷ்ணா நதி நீர் முற்றிலுமாக அண்மையில் நிறுத்தப்பட்டது.

இது தமிழகத்துக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகப் பார்க்கக் கூடாது. தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களுடன் சுமுகமான உறவையே நாங்கள் விரும்புகிறோம் என தெரிவித்தார்.

. என்.டி.ஆர். காலத்தில் இருந்தே தமிழகத்துடனான உறவு சிறப்பாக உள்ளது. நாங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு அதிமுக உள்பட தமிழக எம்பிக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். ஏனென்றால், ஆந்திரமும், தமிழகமும் மாநில உரிமைக்காகவே போராடி வருகின்றன என கூறினார்.

.காவிரி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் விளையாட்டை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் அண்டை மாநிலங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள பிரச்னையை தீர்த்து வைக்காமல் அதை வளர்ப்பதிலேயே மத்திய அரசு தீவிரமாக உள்ளது என குற்றம்சாட்டினார்.

நீர் பங்கீடு தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளை மத்தியஅரசு சுமூகமாகத் தீர்க்க வேண்டும். பிரச்னையை வளர்த்து அரசியல் லாபம் தேடக் கூடாது. தென் மாநில நதிகளை இணைக்க வேண்டும். அப்போது தமிழகத்துக்கு அதிகளவு தண்ணீரை எங்களால் அளிக்க முடியும் என்றும் சந்திரபாபு நாயுடு.தெரிவித்தார்.