தெலுங்கானா மாநிலத்தில்  வரும் 1 ஆம் தேதி முதல் அறிமுகமாகவுள்ள  புதிய போக்குவரத்து விதிகளின்படி பொது இடங்களில் 30 நிமிடங்கள் வரை வாகனங்களுக்கு பார்க்கிங் செய்ய கட்டணம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில்  உள்ள போக்குவரத்து விதிமுறைகளின்படி பொது இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு தற்போது கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. உடனடியாக பார்க்கிங் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் தெலுங்கானா போக்குவரத்துக் துறை பார்க்கிங் தொடர்பான விதிகளில் சில  மாற்றங்கள் செய்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 30 நிமிடங்கள் வரை பார்க்கிங் செய்வதற்கு கட்டணம் ஏதும் கிடையாது என்றும், அதே நேரத்தில்  கடைகளில் பொருட்கள் வாங்கிய பில்லைக் காட்டினால் ஒரு மணி நேரம் வரை பார்க்கிங் கட்டணம் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால், பில் தொகை பார்க்கிங் கட்டணத்தை விட அதிகமாக இருக்க வேண்டும் என்றும் அந்த விதிகளில் கூறப்பட்டுள்ளது.இந்த விதிமுறையால் பொது இடங்களில் போதிய அளவு பார்க்கிங் வசதியைத் தொடர்ந்து உருவாக்க முடியும் என்று கருதுவதாக அம்மாநில போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், தியேட்டர்கள், மால்கள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் போதிய அளவு விசாலமான பார்க்கிங் வசதி இருக்க வேண்டியது கட்டாயம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகள் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தெலுங்கானா மாநிலம் முழுவதும் அமலாகின்றன.