Asianet News TamilAsianet News Tamil

என்னைத் தேடி யாரும் அங்கனூர் வரவேண்டாம்..!! அடங்காத சிறுத்தைகளிடம் கெஞ்சும் திருமாவளவன்..!!

அது நம்மை உற்றார் உறவினரிடமிருந்து  தனிமைப்படுத்திக் கொடுமைப்படுத்திக் கொஞ்சம் கொஞ்சமாய் நம் உயிரைக்குடிக்கும். இருமி-இருமி,மூச்சுத்திணறி- மூச்சுத்திணறி நாம் மெல்ல-மெல்ல சாவதை நாம் மட்டுமேதான்  பார்க்கமுடியும். 

No one should come to Anganur looking for me, Thirumavalavan begs for unruly leopards
Author
Chennai, First Published Aug 7, 2020, 2:20 PM IST

கெஞ்சிக் கேட்கிறேன் தோழர்களே, யாரும் அங்கனூர் வரவேண்டாம் என விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் அக்கட்சி தொண்டர்களை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:-

என் உயிரின் உயிரான விடுதலைச்சிறுத்தைகளே.. வணக்கம். 

என்னை ஆற்றுப்படுத்தும் நன்னோக்கில் என்னைத்தேடி அங்கனூருக்கு வருவது சரிதான். ஆனால், அது முற்றிலும் ஏற்புடையது அல்ல. பல மாவட்டங்களைக் கடந்துவந்து என்னைச் சந்திப்பதில் நிறைய சிக்கலக்கள் இருக்கின்றன. எவ்வாறு நம்மைத் தீங்குசூழும் என்பதை  நம்மால் ஊகிக்க இயலாது. கொரோனா எவ்வளவு கொடியது என்பதை அக்காவைப் பலி கொடுத்ததிலிருந்து மேலும் கூடுதலாக உணர்ந்திருக்கிறேன். அவர் சென்னையில் வீட்டிலேயே தான் இருந்தார். எங்கும் வெளியில் செல்லவில்லை. அவரைத் தேடிவந்து ஓரிருவர் சந்தித்துள்ளனர். உரிய பாதுகாப்புடன்தான் அந்த சந்திப்புகள் நடந்துள்ளன. ஓரிரு முறை வீட்டுக்கருகேயுள்ள பெட்டிக்கடைக்கு போனதாக சொன்னார். கைகளைச் சுத்தம் செய்வது உள்ளிட்ட எச்சரிக்கையாக செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்திருக்கிறார். ஆனாலும், அக்காவை எப்படியோ கொரோனா தொற்றிக்கொண்டதே! 

No one should come to Anganur looking for me, Thirumavalavan begs for unruly leopards

அவரைக் காப்பாற்ற இயலாமல் பறிகொடுக்க நேர்ந்துவிட்டதே! 'பெற்றவயிறு பற்றி எரியுதே' என்று சொல்லிச்சொல்லி, அடிவயிற்றில் அடித்துக்கொண்டு  அம்மா மூன்றுநாட்களாக இடையறாமல் கதறும்நிலை உருவாகிவிட்டதே! சிலநேரங்களில் அவர் பித்துப் பிடித்தைப்போல நிலைகுலைந்து தடுமாறும்நிலை ஏற்பட்டுள்ளதே! கொரோனா எவ்வளவு கொடியது என்பதை இனியாவது நாம் உணரவேண்டாமா?  யாரிடமிருந்து யாருக்கு இது தொற்றும் என்பதை எவராலும் கணித்திட இயலாதே! அறிகுறி காட்டாமலேயே பதுங்கியிருந்து தொற்றிக்கொள்ளும் கொடிய உயிர்க்கொல்லி அல்லவா இந்தக் கொரோனா?

மனிதகுலத்தையே அழித்தொழிக்கும் இனக்கொலைக் கும்பல் அல்லவா இந்தக் கொரோனா கூட்டம்? இனியும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா? கொரோனா கூட்டத்தின் உயிர்க்குடிக்கும் பயங்கரத்திலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டாமா? கொரோனா தொற்றிக்கொண்டால் அதனை அழித்தொழிக்கும் வலிமை எதற்குமே இல்லை; யாருக்குமே இல்லை. அது நம்மை உற்றார் உறவினரிடமிருந்து  தனிமைப்படுத்திக் கொடுமைப்படுத்திக் கொஞ்சம் கொஞ்சமாய் நம் உயிரைக்குடிக்கும். இருமி-இருமி,மூச்சுத்திணறி- மூச்சுத்திணறி நாம் மெல்ல-மெல்ல சாவதை நாம் மட்டுமேதான்  பார்க்கமுடியும். என்ன குரூரம் இது? 

No one should come to Anganur looking for me, Thirumavalavan begs for unruly leopards

நாம் சடலமான பிறகு செத்தநாயை தூக்கி  எறிவதைப்போல அல்லவா  புதைகுழியில் எறியப்படுவோம். தோழர்களே, தயவுகூர்ந்து இதை நெஞ்சிலே இருத்துங்கள். எனக்கு ஆறுதல் சொல்ல எத்தனிக்க வேண்டாம்.  உங்களால் எனக்கு ஏதும் ஏற்பட்டுவிடும் என்பதல்ல என் அச்சம். பயணத்தின் வழியில் கொரோனா  எங்காவது ஒளிந்திருந்து உங்கள்மீது பாய்ந்து குரல்வளையைக் கவ்விக் கொள்ளும். மென்னியை இறுக்கும். அதன் கோரப்பிடியிலிருந்து தப்பிப்பது யார்க் கையிலும் இல்லை. கொரோனா மிக பயங்கரமான கொடுந்தீங்கு. எனவே, கெஞ்சிக் கேட்கிறேன்; என்னை ஆற்றுப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு தேடிவர வேண்டாம். உங்கள் பாதுகாப்புக்காகவே இறைஞ்சுகிறேன். அங்கனூர் வரவேண்டாம்.  ப்ளீஸ்...ப்ளீஸ். என அதில் கூறப்பட்டுள்ளது.  

 

Follow Us:
Download App:
  • android
  • ios