no one is dead in tamilnadu due to dengue said minister sellur raju

தமிழகத்தில் டெங்குவால் இதுவரை எந்த உயிரிழப்பு ஏற்படவில்லை என தெர்மாகோல் அமைச்சர் என சமூக வலைதளங்களில் புகழப்படும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, டெங்குவால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை எனவும் டெங்குவை வைத்து ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் தினமும் சராசரியாக 10 பேர் உயிரிழந்து வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொத்து கொத்தாக இறக்கின்றனர். மக்கள் மீது அக்கறை உள்ள ஒரு அமைச்சர் இப்படித்தான் பொறுப்பு இல்லாமல் பதில் சொல்வாரா? எனவும் இவர் அமைச்சர்தானா? என்ற கேள்விகளையும் மக்கள் எழுப்புகின்றனர்.

தமிழகம் முழுவதும் டெங்குவால் உயிரிழப்புகள் ஏற்படுவது அமைச்சருக்கு தெரியாதா? ஒருவேளை தெரியவில்லை என்றால், தினமும் டெங்குவால் எத்தனை பேர் உயிரிழக்கின்றனர் என செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் செய்திகளை அமைச்சர் பார்க்கவில்லையா? அல்லது தினமும் டெங்குவால் பலர் இறந்து மடிவது தெரிந்தும், ஏதாவது பேசவேண்டும் என்பதற்காக அலட்சியமாக பேசினாரா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தான் ஒரு அமைச்சர் என்ற பொறுப்பை உணராமல், தான்தோன்றித் தனமாக வாயில் வருவதை எல்லாம் அமைச்சர் செல்லூர் ராஜூ உளறிக் கொட்டுகிறார் என மக்கள் விமர்சிக்கின்றனர்.

தான் சொல்வது பொய் என்பது தெரிந்தே அந்த பொய்யை வெளிப்படையாக ஊடகங்களிடம் தெரிவிக்கிறார். அமைச்சர் செல்லூர் ராஜூ. அமைச்சருக்கான பொறுப்பை உணர்ந்து பேசவும் செயல்படவும் வேண்டும் என மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.