ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து யாராலும் கணிக்க முடியாது என்றும், அவரே கூறினால் தான் உண்டு என்றும்  பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், தெரிவித்துள்ளார். ரஜினி எது செய்தாலும் சரியாக தான் செய்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

சென்னை கிண்டியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பாஜக சார்பில், அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் தலைமையில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் அக்கட்சியின் மாநில துணை தலைவர் எம்.என்.ராஜா, தேசிய பொதுக்குழு உறுப்பினர் காளிதாஸ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இல.கணேசன் கூறுகையில், சுதந்திரத்திற்காக நடைப்பெற்ற போராட்டத்திற்கு தலைமைத்தாங்கி வெற்றிகரமாக நடத்தப்பட்ட காரணத்தால் சர்தார்என்றுஅழைக்கப்பட்டார். 

மேலும் மனதளவில் மிக உறுதியானவர். காஷ்மீர் முழுமையான இணைந்தது மோடி ஆட்சிக்கு வந்த பின் தான். அதேபோல் ஆண்டு தோறும் அவர் பிறந்த நாளில் மரியாதை செலுத்துவது வழக்கம் அந்த வகையில் தான் பா.ஜ.க சார்பில் இன்றும் மரியாதை செலுத்தப்பட்டது. பாஜக சார்பில் வேல் யாத்திரை நீண்ட நாட்களுக்கு முன்பே திட்டமிட்டு விட்டோம். திருமா கோஷ்ட்டி சார்ந்தவர்கள் கலவரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். எனவே இதற்கு அரசு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறிய அவர், யாத்திரை கட்சி அமைப்பு ரீதியாக திட்டமிடப்பட்டுள்ளது என்றார், அதில் வேறு எந்த உள் நோக்கமும் இல்லை என்றும், திருமாவளவனைச் சேர்ந்தவர்கள் பிரச்சனையில் ஈடுபடபோகிறார்கள் எனவும் சூட்சமாக கூறினார்.  

இந்நிலையில் அரசிற்கு இதை தடுக்க எந்த காரணமும் இல்லை என்ற அவர், நாங்கள் பேசி இதற்கு அனுமதி வாங்குவோம் என்றார் அதுமட்டுமின்றி பாஜகவிற்கு மக்கள் மத்தியில் அதிகம் புகழ் கூடி விடுமோ என்ற எண்ணம் திருமாவளவனுக்கு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். எந்த கேள்விக்கும் பதில் கூற முடிந்த என்னால், ரஜினிக்காக மட்டும் என்னால் பதில் கூற முடியாது என்றார். மேலும் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து யாராலும் கணிக்க முடியாது என்றும், அவரே கூறினால் மட்டும் தான் உண்டு என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல் ரஜினி எது செய்தாலும் சரியாக தான் செய்வார். எனவே பதில் கூற வேண்டியவர் ரஜினி தான் என இல.கணேசன் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களை அரசாங்கம் அனுப்பவில்லை. அவர் அதிகாரத்தில் இருக்கும் போதே கிறிஸ்துவ மதத்தை பரப்பியவர், தற்போது முழுமையாக மதத்தை பரப்ப வேண்டும் என பதவி விலகுகிறார் என நினைக்கிறேன் என்றார்.