பொன்.ராதாகிருஷ்ணன் பாஜகவில் சாதாரண தொண்டர், கூட்டணி குறித்த அவரின் கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் காட்டமாக பதில் அளித்துள்ளார்.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்பி. உதயகுமார் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து அவர் பேசியதாவது:  

தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகம் முன்மாதிரியாக செயல்படுகிறது, ஊரடங்கு காலங்களில் கூட விவசாயமும், தகவல் தொழில்நுட்பத்துறையும் மட்டுமே தடையின்றி நடைபெற்றது, இது துறைகளுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தன்னிகரில்லா அதிமுகவின் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி உருவாகியுள்ளார், திராவிட இயக்க வரலாற்றில் எளிய விவசாயியாக, தமிழக மக்களின் விசுவாசியாக இருந்து வருபவர் எடப்பாடி பழனிச்சாமி ஆவார். அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்த வர்தா புயலை விரட்டிய துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி என எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து அதிமுக அம்மா பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். 

 

விசுவாத்துடன் உழைக்கும் தொண்டர்களுக்கு வாய்ப்பு உண்டு என்பது தான் அதிமுக மீதான எண்ணம், சாமானியர்கள் சரித்திரம் படைக்கலாம் என்பது தான் அதிமுகவின் பலம், ஆனால் அதை பலவீனமாக நினைப்பது எதிரணியினரின் தவறு. 40ஆண்டுகள் பொது சேவையாற்றும் மோடி அவர்களே எடப்பாடி பழனிச்சாமியை பாராட்டிய நிலையில், ஸ்டாலின் அவர்கள் குறை கூறுவது என்ற பழைய பல்லவியையே பாடிவருகிறார். பொன்.ராதாகிருஷ்ணனை பொறுத்தவரையில் அவர் பாஜகவில் ஒரு சாதாரண தொண்டர் தான்,  அவரின் கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை. அதிமுக கூட்டணி குறித்து பல கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் கருத்து சொல்லலாம், ஆனால் தலைவர்கள் தான் அதில் முடிவெடுப்பார்கள் என்றார். 

மேலும் தமிழ்மொழி உரிமைக்காக முதலில் குரல் கொடுப்பது அதிமுக தான் எனவும், தமிழுக்காக மாநாடு நடத்தியவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா தான். அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மட்டும் தான் தமிழுக்ககாக மாநாடு நடத்தியவர்கள் மற்றவர்கள் எதற்காக மாநாடு நடத்தினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மேலும் மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் இந்தியாவின் முன்னோடி திட்டமாக உருவாகிவருகிறது. தமிழகத்தில் கொரோனா எத்தனை கட்டங்களாக வந்தாலும் தமிழக அரசு அதை எதிர்கொள்ள தயாராகவுள்ளது. கொரோனா வைரஸ் ஊரை விட்டு போகவில்லை இங்கு தான் சுற்றிகொண்டு இருக்கிறது, பொதுமக்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். மதுரை மண்டலம் மீதான கவனத்தை ஈர்க்கும் வகையில் அதிமுகவின் சாதாரண தொண்டர்கள் இருவர் வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்றுள்ளனர். 

அதிமுகவில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்கள் சென்ற இடத்தில் அத்தலைமையை தூக்கி பிடித்துவருவதை கண்டுகொள்ள கூடாது என்றார்.அரசியல் என்ற பொதுவாழ்வில் துரோகம், சூழ்ச்சி, நெருக்கடிகள் இருக்கும் அதை எதிர்த்து போராடி வெல்ல வேண்டும் எனவும், எடப்பாடியின் செயல்பாடுகளை கண்டு அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர் என்றும், அம்மாவின் ஆன்மா மற்றும் அவர் கொடுத்த பயிற்சியை அடையாளமாக ஏந்தி தேர்தலை எதிர்கொள்வோம் என்றார்.