பாபர் மசூதி-ராம ஜென்ம பூமி வழக்கில் ஜாமியாத் உலிமா-இ-ஹிந்த் அமைப்பும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக வாதாடியது . ஆனால் அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம், முஸ்லிம்களுக்கு அயோத்தியில் தனியாக 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது


இந்நிலையில் அமைப்பின் தலைவர் மவுலானா பத்ஷா கான் கூறும்போது, “பாபர் மசூதி நிலத்துக்காகவே சட்ட ரீதியாக வழக்காடினோம். வேறொரு நிலத்துக்காக அல்ல. வேறு எங்கும் மசூதிக்காக எந்த ஒரு நிலமும் எங்களுக்குத் தேவையில்லை. 

இந்த 5 ஏக்கர் நிலத்தையும் கூட ராமர் கோயிலுக்கு வழங்கத் தயாராக இருக்கிறோம் ” என்றார்.
“நாங்கள் நிலம் வாங்கி அதில் மசூதிக் கட்டிக் கொள்ள முடியும். நாங்கள் எந்த ஒரு அரசையும் இதற்காக நம்பியில்லை. நீதிமன்றமோ, அரசோ எங்கள் உணர்வுகளை மட்டுப்படுத்த வெண்டும் என்று விரும்பினால் 5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட அந்தப் பகுதிக்குள்ளேயே தர வேண்டும்” என்று மவுலானா ஜலால் அஷ்ரப் என்ற உள்ளூர் மதகுரு தெரிவித்தார்.


இந்த வழக்கில் முக்கிய மனுதாரரான இக்பால் அன்சாரி என்பவர் கூறும்போது, “அவர்கள் எங்களுக்கு நிலம் அளிக்க வேண்டும் என்று விரும்பினால், எங்கள் வசதிக்கேற்பவே அளிக்க வேண்டும். 

அதாவது அந்த 67 ஏக்கர் நிலப்பகுதியில்தான் அளிக்க வேண்டும்” என்றார்.அயோத்தியில் உள்ள முஸ்லிம் சமூக ஆர்வலர் டாக்டர் யூசுப் கான், “எங்கள் சமயத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அயோத்தியில் நிறைய மசூதிகள் உள்ளன. உச்ச நீதிமன்றம் ராமர் கோயில் சார்பாக தீர்ப்பளித்து விட்டதால் இனி இந்த விவகாரம் முடிந்த ஒன்று” என்றார்.