மக்களுக்கு இடையூறு  இல்லாமல் இருக்கும் வகையில் பேனர், பதாகைகள் போன்றவற்றை  தவிர்க்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று மாலை சென்னையில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்க உள்ள இந்த பொதுக்கூட்டத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்குகிறார். 

பெண்கள் தின பொதுக்கூட்டத்தை நடத்துவதற்காக கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களான நடிகை ஸ்ரீப்ரியா ராஜ்குமார், கமீலா நாசர் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுக்கூட்டத்தில் பெண்களை அதிக அளவில் பங்கேற்கச் செய்ய மக்கள் நீதி மய்யத்தினர் தீவிர ஏற்பாடு செய்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கடந்த 21-ம் தேதி தொடங்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.

பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்க விருக்கும் நிலையில், கமல்ஹாசன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் ,   இன்று மாலை  ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெறும் மகளிர் தின விழாவிற்கு அனைவரும் வருக. மக்களுக்கு இடையூறு இல்லாதிருக்க, நம்மவர்கள் போஸ்டர்கள்,பேனர்கள், பதாகைகளைத் தவிர்க்கவும்! என கறாராக தெரிவித்துள்ளார்.