தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்க இருப்பதையடுத்து தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் அறையில் இருந்த பெயர் பலகைகள் அகற்றிய அதேவேளை, ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் ஆகியோரது புகைப்படங்களை தங்களது சோசியல் மீடியா பக்கங்களில் இருந்து அகற்றி வருகின்றனர் அமைச்சர் பெருமகனார்கள்.

நேற்று காலை வரை அமைச்சர்களாக இருந்த அனைவரும், தங்களுடைய அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கத்தில் வைத்திருந்த முகப்புப் படத்தில் ஒருபக்கம் மறைந்த முதல்வர்கள் செல்வி ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் புகைப்படங்களும், அதேபோல, வலது பக்கத்தில் இ..பி.எஸ்., ஓ.பி.எஸ்., ஆகியோரின் புகைப்படங்களையும் வைத்திருந்தனர்.

ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான சற்று நேரத்தில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., ஆகியோரின் படங்களை அகற்றிவிட்டு, மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் படங்களை வைத்துள்ளனர். அதிமுக தோல்வியை வைத்து இரட்டை தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதற்கான அறிகுறியா இது என்று கேள்வி கேட்கிறார்கள் அதிமுக உள்வட்டத்திற்குள் ஏற்பட்டிருக்கும் மனமாற்றத்தை அறிந்த அதிமுக முன்னணி நிர்வாகிகள்.

முன்னாள் முதல்வர் இ.பி.எஸ். தலைமையிலான நான்காண்டு ஆட்சிக்கு எதிராக மக்கள் மிகப்பெரிய கோபத்தில் இல்லை என்பதும், திமுக அமைத்த பலமான கூட்டணியும், பாஜக.வை தோளில் தூக்கி சுமந்ததும், கடைசி நேரத்தில் தேமுதிக.வை கழற்றிவிட்டதும் அதிமுக தோல்விக்கு காரணமாக அமைந்ததுவிட்டதாக பேச்சு எழுந்துவிட்டது.

அதிமுக.விற்கு ஏற்பட்ட தோல்விக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும்கூட, அதிமுக மீண்டும் எழுச்சியோடு நடைபோட இரட்டை தலைமை தேவையா, ஒற்றைத் தலைமை தேவையா என்பதை முடிவு செய்வதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை. வெகு விரைவாக தொடங்கப் போகிறது என்பதற்கு அறிகுறியாகதான் முன்னாள் அமைச்சர்களும், தோல்வியடைந்த அமைச்சர்களும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., ஆகியோரின் படங்களை அகற்றிவிட்டு, டிவிட்டர் பக்கத்தின் முகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் படங்களை மட்டுமே வைத்திருக்கிறார்களோ என்கிற சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை.