நாம் தமிழர் கட்சியின் அடையாளம் சீமான் தான் வேறு யாருமில்லை, என அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசன் கூறியுள்ளார்.  நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் பேராசியர்.கல்யாணசுந்தரம் அவர் சமீபத்தில் அளித்த பேட்டிகள், அவரின் செயல்பாடுகள் கட்சிக்கு எதிரானது என்று கூறி அவருடைய தொடர்பை கட்சியினர் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்றும், அதே நேரத்தில் கல்யாண சுந்தரத்தை கட்சியில் இருந்து விளக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்த அவர், கருத்து வேறுபாட்டால் இந்தக் காட்சியில் இருந்து பலர் வெளியேறுகிறார்கள். யார் இல்லை என்றாலும் கட்சி இருக்கும். தனி மனிதர்களால் நாம் தமிழர் போன்ற ஒரு கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்திவிட முடியாது. ஆனாலும் தனிமனிதர்களின் ஆற்றல்களை, கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில்  நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாகவும் கல்யாணசுந்தரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதேநேரத்தில் அக்கட்சியின் மற்றொரு முக்கிய பொறுப்பாளராக இருந்து வந்த வழக்கறிஞர் ராஜிவ்காந்தியும் கட்சியில் இருந்து விலகியுள்ளார். அடுத்தடுத்து இரண்டு முக்கிய நபர்கள் அக்கட்சியிலிருந்து விலகி இருப்பதால் நாம் தமிழர் கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் சமூக நீதிப் போராளி இமானுவேல் சேகரனார் மற்றும் பாரதியாரின்  நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசு தலைமையில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து இருவரின் திருவுருவ படத்திற்கு   மலர் தூவி மரியாதை செலுத்தி, உறுதிமொழி எடுத்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்பு தென்னரசு, நாம் தமிழர் கட்சியின் அடையாளம் சீமான் தான்.  மற்றவர்கள் இல்லை என்றும், ராஜீவ்காந்தி வெளியேறியது தொடர்பாக கட்சியில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் சரியாகவில்லை என்றும், ஆனாலும் கட்சியில் எந்த சிக்கலும் இல்லை என்றும் கூறினார். மேலும்  சட்டமன்றத் தேர்தலுக்கான பணியில் நாம் தமிழர் கட்சி முழுமையாக ஈடுபட்டிருக்கிறது. விரைவில் தேர்தலை சந்திக்க கட்சி தயாராக இருக்கிறது என கூறினார்.