எத்தனை நாட்கள் ஆனாலும் பரவாயில்லை டெல்லியில் போராட்டம் நடத்தியே தீரவேண்டும் என்பதில் விவசாயிகள்  தீவிரமாக இருந்து வருகின்றனர். இதனால் பல நாட்களுக்கு தேவையான உணவு பொருட்களுடன் அவர்கள் டில்லி நோக்கி படையெடுத்து வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை நோக்கி நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் மிகப்பெரிய பேரணி நடத்தி டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர்.

ராஜஸ்தான், பஞ்சாப், கேரளா, உத்தரகாண்ட், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் அதில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் நாட்டில் இன்னும் பிற பகுதிகளில் இருந்து விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் டிராக்டர் களிலும், நடந்தும் டெல்லியை நோக்கி பயணித்தனர். ஆனால் அவர்களை தடுக்க திட்டமிட்ட ஹாரியான காவல்துறை தங்களது மாநில எல்லையில் (பேரிகார்டு) தடுப்புகளை அமைத்து தடுக்க முயற்சித்தது. இதனால் அங்கு திரண்ட பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்நிலையில் தண்ணீர் பீரங்கிகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி விவசாயிகளைக் கலைத்தனர். இதனால் போரணி மோதலாக மாறி பின்னர் வன்முறையில் முடிந்தது. 

இந்நிலையில் ஹரியானாவில் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. போராட்டத்தை கண்காணிக்க போலீசார் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பேரணி வன்முறையில் முடிந்ததையடுத்து இது குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன." இவர்கள் விவசாயிகள் அல்ல காங்கிரஸ் கட்சியால் திட்டமிட்டு அனுப்பப்பட்ட குண்டர்கள்" என பாஜகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் பேரணி தேசிய நெடுஞ்சாலையில் பானிபட் சுங்கச்சாவடி அருகே தடுத்து நிறுத்தப்பட்டது. அரியானாவில் சில இடங்களில் தடுப்புகளை உடைத்து வன்முறையில் ஈடுபட்ட போலீசாரை தண்ணீர் பீச்சி அடித்தும், புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். இந்நிலையில் இரண்டாவது நாளாகவும் விவஞாயிகள் பேரணி செல்ல முயன்று வருகின்றனர். இதனால் பிற மாநிலங்களில் இருந்து டெல்லி செல்லும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் எத்தனை நாட்கள் ஆனாலும் சரி, டெல்லியில் போராட்டம் நடத்தியே தீருவோம் என்ற முடிவில் பஞ்சாப், ராஜஸ்தான் மாநில விவசாயிகள் தீவிரமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் குடும்பம் குடும்பமாக அவர்கள் தங்களது மாநிலத்திலிருந்து டெல்லி நோக்கி விரைந்தவண்ணமுள்ளனர். டெல்லியை நோக்கி பயணம் தொடங்கிய சில விவசாயிகள் 6 மாதத்திற்கு தேவையான உணவுப்பொருட்களை தங்களது டிராக்டர்களில் ஏற்றி வந்திருப்பதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அமிர்தசரஸில் இருந்து கிசான் மஸ்தூர் சங்கர்ஸ் கமிட்டி உறுப்பினர்கள், ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள், சமையல் பாத்திரங்களுடன் இன்று டெல்லி புறப்பட்டனர். ஏராளமான விவசாயிகள் முன்னேற்பாடுகளுடன் டெல்லிக்கு புறப்பட்டுள்ளதால், அவர்களை எப்படி கையாள்வது என்பது தொடர்பாக டெல்லி மாநில அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் டெல்லி நோக்கி வரும் விவசாயிகளை ஹரியானா மற்றும் டெல்லி எல்லையிலேயே கைதுசெய்து அவர்களை தடுப்புக் காவலில் வைக்க ஏராளமான மைதானங்கள் தயார்படுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.