சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா சட்டப் பேரவை கலைக்கப்பட்டதையடுத்து  காபந்து முதலமைச்சராக சந்திரசேகர ராவ் நீடிக்கிறார்.  இதையடுத்து அங்கு வரும் 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.

தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, தெலுங்கு தேசம் - காங்கிரஸ் கூட்டணி, பா.ஜனதா கூட்டணி என மும்முனைப்போட்டி நிலவுகிறது. மாநிலத்தில் வழக்கத்திற்கு அதிகமாக பாஜக அதிதீவிர முக்கியத்துவத்தை கொடுக்கிறது.இதனால் பாஜக தெலங்கானா வாக்கை பெருவாரியாக பிரிக்கும் எனவும் பார்க்கப்படுகிறது.

இதனிடையே தெலுங்கானாவிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடக்கிறது. வடமாநில தேர்தல்களில் தீவிரமாக பிரசாரம் செய்த பிரதமர் மோடி இன்று தெலுங்கானாவில் பிரசாரம் மேற்கொண்டார்.

தெலுங்கானா மாநிலம் நிஜாம்பாத் தொகுதியின் எம்.பி.யாக சந்திரசேகர ராவ் மகள் கவிதா உள்ளார். இதனை மையப்படுத்தி பிரதமர் மோடி பேசுகையில் நிஜாம்பாத் நகரை லண்டன் நகருக்கு இணையாக மாற்றிக் காட்டுவேன் என்ற உங்களுடைய முதல்வர் கூறியிருந்தார். ஆனால் இங்கு குடிநீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட எந்தஒரு அடிப்படை வசதிகளும் கிடையாது. மக்கள் துன்பத்தில் உள்ளனர் என்றார். தெலுங்கானாவிலும் குடும்ப ஆட்சி என்பது உள்பட அதிரடியான சாடல்களை முன்வைத்தார். 

இதற்கு மெகபூபாநகரில் பிரசாரம் செய்த சந்திரசேகர ராவ் பதிலடியை கொடுத்தார்.  இதுபோன்ற பொய்யை எப்படி சொல்ல முடியும்?... நீங்கள் சொல்லக்கூடாது. பிரதமர் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு வாக்குக்காக  இதுபோன்ற பொய்களை சொல்லக்கூடாது என அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். 

தெலுங்கானாவில் மின்சாரம் இல்லையென்று கூறியுள்ளீர்கள். இதுபோன்று பொய் சொல்லாதீர்கள். இதனை சொல்ல நான் மிகவும் வருத்தப்படுகிறேன். இதுபோன்ற தவறான குற்றச்சாட்டை முதலமைச்சருக்கு  எதிராக வைக்க கூடாது.

யாருக்கும் நான் பயப்படமாட்டேன். நான் ஒன்றும் சந்திரபாபு நாயுடு கிடையாது. இந்தியாவில் 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கும் மாநிலம் தெலுங்கானாதான். பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் அதுபோன்று மின்சாரம் வழங்கப்படுகிறதா?  என கேள்வியை எழுப்பியுள்ளார்.