ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 100 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்து  வரும் ப.சிதம்பரம், அடிக்கடி நாட்டு நடப்புகள் தொடர்பான தனது கருத்துக்களை டிவிட்டரில் தெரிவித்து வருகிறார். 

ப.சிதம்பரம் சார்பாக அவரது குடும்பத்தினர் அவருடைய கருத்துக்களை டிவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தொடர்பாக தனது கருத்தை டிவிட்டரில் ப.சிதம்பரம் பதிவு செய்துள்ளார். 

அந்த பதிவில், கீழ்க்கண்டவற்றை பதிவு செய்யுமாறு எனது குடும்பத்தினரிடம் கேட்டுக் கொண்டேன். பரவலாக கணித்தப்படி, இரண்டாவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. 

ஆனால் இன்னும் எல்லாம் நன்றாகவே உள்ளது என அரசு சொல்லுகிறது. மூன்றாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.5 சதவீதத்துக்கு மேல் இருக்காது மற்றும் மிகவும் மோசமாகவே இருக்க வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) காலாண்டில் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்தது. வேலை வாய்ப்பின்மை, தொழில்துறையில் முதலீடு குறைந்தது மற்றும் நுகர்வோர் செலவினங்களை சுருக்கியது போன்றவற்றால் பொருளாதார வளர்ச்சி சரிவு கண்டது. 

இந்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த செப்டம்பர் காலாண்டில் 4.5 சதவீதமாக குறைந்தது. பொருளாதார வளர்ச்சி குறைந்ததுள்ளது மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசுக்கு பெரும் குடைச்சலை ஏற்படுத்தியுள்ளது.