அதிமுகவின் சின்னத்தை முடக்க யாராலும் முடியாது எனவும், சசிகலாவின் விடுதலை அதிமுகவில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார். 

சென்னை மந்தவெளி பகுதியில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை துவங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது: நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய உடல்நிலையை கூறி அரசியலுக்கு வருவதை தவிர்த்து உள்ளார். எனவே இன்று போல் என்றும் அவர் வாழ வேண்டும் என்பதே எங்கள் ஆசை. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும் வராமல் சென்றாலும் அதிமுகவிற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. ரஜினி ரசிகர் மட்டும் இல்லாமல் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் எங்களுக்கு வாக்களிப்பார்கள். 

திமுக தலைவர் ஸ்டாலின் அவருடைய கட்சியில் உள்ள பிரச்சினைகளை மறைக்க அதிமுகவில் பிரச்சினை உள்ளதாக கூறி வருகிறார். அதிமுகவில் தொண்டர்கள் கூட முதல்வர் ஆகலாம் என்ற நிலை உள்ள நிலையில் திமுகவில் ஒரு சிலரின் புகைப்படங்கள் மட்டுமே கட்சி போஸ்டரில் இடம் பெறவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு உள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். இதற்கு காரணம் திமுகவில் உள்ள மூத்த தலைவர்கள் துரைமுருகன், கனிமொழி ஆகியோர் வளர்ந்து விடுவார்கள் என்பதால்தான் இந்த முடிவை அவர் எடுத்து உள்ளார். பொங்கல் பரிசு டோக்கனை அதிமுக நிர்வாகிகள் வழங்குவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு வரும் டோக்கனில் இரட்டை இலை சின்னம் பொறுத்தப்படவில்லை ஆனால் திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட போது கட்சியின் சின்னம் பொருத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது என்றார். 

அமைச்சர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவ, கட்சியின் சின்னம் இருந்தால் மட்டுமே தவறு என்றும் அமைச்சர்கள் அரசாங்கத்தை சார்ந்தவர்கள் எனவே அதில் தவறு இல்லை என்றும், இந்த திட்டம் மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளதால்
காழ்ப்புணர்ச்சியால் திமுக பொங்கல் பரிசை திசை திருப்ப நினைக்கிறது என்றும் கூறினார். அதிமுகவின் சின்னத்தை முடக்க முயற்சிகள் எடுக்கப்படுகிறதா என்று கேள்விக்கு பதில் அளித்த அவர், அதிமுகவை முடக்க எந்த கொம்பனாலும் முடியாது என்றும் அதிமுகவை பிரிக்க பல்வேறு நபர்கள் முயற்சி செய்தும் அசைக்க முடியவில்லை என்றும் கூறினார். சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் அவரால் எந்த பாதிப்பும் அதிமுகவில் ஏற்படாது என்று கூறினார்.