இந்தியாவின் 73-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றினார்.
 
இதேபோல் தமிழகத்திலும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள கோட்டைகொத்தளம் உள்பட தலைமைச் செயலகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளித்தது.

காலை 8.45 மணியளவில் கோட்டை கொத்தளத்திற்கு வருகை தந்த முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.  அதன்பின்னர் 9 மணியளவில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, உரையாற்றிய  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -  இரு மொழிக்கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியை திணிக்க கூடாது.  இந்தியை திணிக்க எடுக்கப்படும் முயற்சியை முறியடிப்பதில் உறுதியாக உள்ளோம் என அதிரடியாக தெரிவித்தார்..  

தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அரசு நடவடிக்கையை எடுத்து வருகிறது.  தமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்ல பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகிறது என்றும் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக தெரிவித்தார்.