முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவில் பொதுச் செயலாளரே இல்லை என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைந்த பிறகு அவரது தோழி சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக, பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் ஓபிஎஸ் திடீரென போர்க்கொடி உயர்த்தி, தனி அணியாக பிரிந்து சென்றார். சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் முறையிட்டார்.

இந்நிலையில் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை ஒதுக்கிவிட்டு ஓபிஎஸ்ம். இபிஎஸ்ம் இணைந்தனர். தொடர்ந்து சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து செய்தியளார்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், நாளை நடைபெறவுள்ள  பொதுக்குழு கூட்டம் சட்டவிதிகளுக்கு உட்பட்டே கூடவுள்ளதாக தெரிவித்தார். பொதுக்குழு உறுப்பினர்கள் 5 ல் ஒரு பங்கு பேர் கூட்டத்தை கூட்டலாம் எனவும் அவர் கூறினார்

கட்சியின் பொதுச் செயலாளருக்கு தான் பொதுக்குழு கூட்டத்தை கூட்டும்  அதிகாரம் உள்ளதா  என்ற நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போது அதிமுகவில் பொதுச் செயலாளரே இல்லை என அதிரடியாக தெரிவித்தார்.