சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் எதிரே பனங்காட்டு படை கட்சி சார்ந்த ஹரிநாடார் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளரிடம் பேசிய பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் அரி நாடார்,  கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் என  தந்தை மகன் ஆகிய இரண்டு பேர் போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கை தமிழக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்த விசாரணையின் வேகம் ஆரம்பத்தில் உண்மையிலேயே சிறப்பாக இருந்தது. 

அதேபோன்று கைது நடவடிக்கையும் சிறப்பாக இருந்தது, அதன் பிறகு அதாவது சிபிஐ விசாரணை தொடங்கிய பிறகு இந்த வழக்கின் தன்மை மிகவும் மந்தமாக உள்ளது.  குறிப்பாக சிபிஐ இதுவரை எந்த குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யவில்லை. அதேபோன்று இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை கைது செய்யவுமில்லை. மேலும் சாத்தான்குளம் சம்பவத்தில் உடந்தையாக செயல்பட்ட நீதிபதி அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவருக்கு துணையாக இருந்த அதிகாரிகள் மருத்துவர்கள் இவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன். சி பி ஐ பொருத்தவரை எந்த வழக்காக இருந்தாலும் நீதிமன்றம் மூலமாக தண்டனையைப் பெற்றுத் தருவார்கள், என்ற நம்பிக்கை இருந்து வந்தது. 

இந்நிலையில் சி.பி.ஐயின் மீது நம்பகத்தன்மை குறைந்து வருகிறது. குறிப்பாக சாத்தான்குளம், தந்தை மகன் உயிரிழப்பு குறித்து எங்களுக்கு நீதி வேண்டும். மேலும் தடையை மீறி நாடார் சமூகத்தினர் சிபிஐ அலுவலகம் சென்றதால் போலீசார் கைது செய்து நுங்கம்பாக்கத்தில் உள்ள சமூக நலக் கூடத்தில் அடைத்து வைத்துள்ளனர்.