Bangalore parappana akrahara not been doing anything special facilities in jail for

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

இதையடுத்து, சசிகலாவுக்கு சிறையில் எந்தமாதிரி வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என்பது குறித்த விபரங்களை தெரிவிக்க வேண்டும் என சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜவேலாயுதம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்திருந்தார்.

இது குறித்து கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி, விளக்கம் அளித்துள்ளார்.அதில் சசிகலாவுக்கு சிறையில் எந்தவித சிறப்பு வசதியும் செய்து தரப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். கட்டில், மெத்தை, வாட்டர் ஹீட்டர், போன்ற வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் தனி குளியலறை மட்டும் ஒதுக்கித் தரப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

சசிகலாவை அவரது உறவினர் டி.டி.வி.தினகரன் கடந்த 20 ஆம் தேதி அரை மணி நேரம் சந்தித்துப் பேசியதாக டி.ஐ.ஜி தெரிவித்துள்ளார்.

மேலும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை சென்னை மத்திய சிறைக்கு மாற்றக் கோரி மனு எதுவும் செய்யப்படவில்லை எனவும் டி.ஐ.ஜி விளக்கம் அளித்துள்ளார்.

ஆர்.டி.ஐ மனுவுக்கு பதிலளித்து சிறை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சசிகலாவுக்கு மின்விசிறி தவிர வேறெந்த வசதியும் செய்து தரப்படவில்லை என்று தெரிவித்துள்ளதன் மூலம் சிறையில் சசிகலா தரையில் தான் படுக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.