நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்ல.. அதனால்தான் புலம்பல்.. ஸ்டாலினை பங்கம் செய்த ஜெயக்குமார்
தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். திமுக நிர்வாகிகளிடம் சர்வாதிகாரத்தை காட்டும் துணிச்சல் ஸ்டாலினுக்கு இல்லை என்றும் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் அதன் அமைச்சர்கள் பேச்சு மற்றும் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது. குறிப்பாக கட்சியின் மூத்த அமைச்சர் பொன்முடி சமீபத்தில் மகளிர் இலவச பயணத்தை ஓசி என விமர்சித்தது பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்டா ஒரு பெண்மணியை ' ஏய் நீ உட்காரு அப்புறம் பேசு ' என ஆணவமாக பேசியது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், மனு கொடுக்க வந்த பழங்குடியின அமைப்பைச் சேர்ந்த இரணியன் என்பவரை அவமரியாதை செய்யும் வகையில் கால் மீது கால் போட்டுக்கொண்டு சாதி ஆணவ போக்குடன் நடந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்தான் பொதுக்குழுவில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திமுக நிர்வாகிகள், மக்கள் மத்தியில் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும், நீங்கள் நடந்து கொள்கிற விதம் எனக்கு மனக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. என தூக்கத்தை கலைத்துள்ளது என மனம் வெதும்பி ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
முதலமைச்சர் இந்த பேச்சு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பலரும் பல வகையில் இதை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள், தவறு செய்யும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலினுக்கு துணிச்சல் இல்லை, அவர் கட்சி நிர்வாகிகளை பார்த்து பயப்படுகிறார் என விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக ஒரு குடும்ப ஆதிக்கம் நிறைந்த கூட்டம், திமுக என்ற குடும்ப ஆதிக்கத்திலிருந்து தமிழகத்தை மீட்டவர் எம்ஜிஆர் அவர்கள்தான்.
ஆனால் அதிமுகவைப் பொறுத்தவரையில் கட்சியே குடும்பம், திமுகவைப் பொறுத்தவரையில் குடும்பமே கட்சி என விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், தவறு செய்யும் கட்சி நிர்வாகிகளிடம் சர்வாதிகாரம் காட்டும் துணிச்சல் ஸ்டாலினிடம் இல்லை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தைரியத்தில் ஒரு விழுக்காடுகூட ஸ்டாலினிடம் கிடையாது.
அதனால் தான் தவறு செய்யும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க அஞ்சுகிறார். நடவடிக்கை எடுக்க முடியாமல் நேற்றைய கூட்டத்தில் புலம்பியுள்ளார். மொத்தத்தில் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே பொம்மை ஆட்சியை ஸ்டாலின் நடத்திக்கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் விமர்சித்தார்.