பதவியை இழக்கிறாரா நெல்லை மேயர்? இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்.. திமுக கவுன்சிலர்கள் எங்கே?
நெல்லை மேயரை மாற்றக்கோரி கவுன்சிலர்களில் ஒரு தரப்பினர் அமைச்சர் நேருவை நேரில் சந்தித்து முறையிட்டனர். மேயரை மாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினர்.
ஆளுங்கட்சியை சேர்ந்த நெல்லை மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் முன்மொழிந்த நிலையில் இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 51 இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். நெல்லை மேயராக திமுகவைச் சேர்ந்த சரவணன் உள்ளார். இந்நிலையில், ஒரு தரப்பினர் மேயர் சரவணனுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் நெல்லை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க;- இன்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வாக்கெடுப்பு; தங்கம் தென்னரசுவின் அதிரடியால் தப்பும் மேயர் சரவணன்?
நெல்லை மேயரை மாற்றக்கோரி கவுன்சிலர்களில் ஒரு தரப்பினர் அமைச்சர் நேருவை நேரில் சந்தித்து முறையிட்டனர். மேயரை மாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினர். இந்த மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவர மேயர் மற்றும் கவுன்சிலர்களை நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு சமீபத்தில் எச்சரித்திருந்தார். ஆனாலும் அமைச்சர் பேச்சை மீறி கவுன்சிலர்கள் மேயருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் தாக்ரேவிடம் மேயர் சரவணனுக்கு எதிராக 38 திமுக கவுன்சிலர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆணையரிடம் மனு அளித்தனர். இதனையடுத்து கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று வரும் 12ம் தேதி நெல்லை மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே கடந்த 9ம் தேதி நெல்லை தனியார் ஓட்டலில் பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு திமுக கவுன்சிலர்கள், மாவட்ட செயலாளர் மைதீன் கான், எம்எல்ஏ அப்துல் வஹாப் உள்பட முக்கிய நிர்வாகிகளை அழைத்து பேசினார். இந்த கூட்டத்தின் போது திமுக கவுன்சிலர்கள் மேயர் சரவணனுக்கு எதிராக புகார்களை அடுக்கினர். அப்போது சொந்த கட்சி மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது நாடாளுமன்ற தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும். இது கட்சி தலைமையின் உத்தரவை மீறுவது போன்றதாகும். இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து சமரசம் ஏற்பட்டதை அடுத்து திமுக கவுன்சிலர்கள் அனைவரும் இரு குழுக்களாக சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க;- 213 நாட்களாக புழல் சிறையில் தவிக்கும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று வெளியாகிறது தீர்ப்பு.!
இவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் திமுக கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைய அதிக வாய்ப்புள்ளது. நம்பிக்கை இல்லாத தீர்மானம் தோல்வி அடையும் பட்சத்தில் திமுக மேயராக மீண்டும் சரவணன் தொடருவார் என்பது குறிப்பிடத்தக்கது.