no chance to work with rajini in politics said kamal
அரசியலில் ரஜினியுடன் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத அரசியல் களத்தில் ரஜினியும் கமலும் இறங்குகின்றனர். இருவருமே அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்ட நிலையில், இருவரும் கூட்டணி சேர வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.

இதுதொடர்பாக இருவருமே காலம் தான் பதில் சொல்லும் என்று கூறிவந்தனர். இந்நிலையில், ரஜினியுடன் அரசியலில் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்துகொண்ட கமல்ஹாசன், கடந்த 37 ஆண்டுகளாக நற்பணி மன்றங்கள் மூலம் அரசியல் சேவையில் ஈடுபட்டு வந்ததாகவும் தற்போது நேரடி அரசியலில் ஈடுபட வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

பணத்துக்காக மக்களிடம் கையேந்தவில்லை; நல்ல கருத்துகளுக்காகவே மக்களிடம் கையேந்துவதாகவும் தெரிவித்த கமல், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதை முன்மாதிரி கிராமமாக மாற்ற போவதாக தெரிவித்தார்.

ரஜினியுடன் கூட்டணி தொடர்பாக பேசிய கமல், ரஜினியும் நானும் நீண்டகால நண்பர்கள். அரசியலில் இருவரும் பொதுநோக்கமும் ஒன்றுதான். ஆனால் பாதை வெவ்வேறு. எனவே ரஜினியுடன் அரசியலில் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என வெளிப்படையாக தெரிவித்துவிட்டார்.
