வரும் ஏப்ரல் , மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆட்சியைப் பிடிக்க ஆளும் பாஜக பெரு முயற்சி செய்து வருகிறது. அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியும் பிரச்சாரம், தேர்தல் கூட்டணி என அதிரடியாக களம் இறங்கியுள்ளது.

பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம், திரிணாமூல காங்கிரஸ்  உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிராக சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. பெருட்டபாலான கூட்டணி கட்சிகள் பாஜகவை விட்டு வெளியேறத் தொடங்கிவிட்டன.

இதனிடையே பல செய்தி சேனல்களும், தனியார் நிறுவனங்களும் தேர்தல் களம் எப்படி இருக்கும் ?  என கருத்துக் கணிப்பை வெளியிட்டு வருகின்றன. இது வரை மூன்று கருத்துக் கணிப்பு  முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்கள் நடத்திய அந்த கருத்துக் கணிப்பில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் நடவடிக்கைகளால் உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டு பாஜகவுக்கு 15 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என கூறப்பட்டது.

மற்றொரு கருத்துக் கணிப்பில் உ.பி.யில் மட்டும் பாஜகவுக்கு 40 இடங்கள் கிடைக்கலாம் எனவும் பகுஜன் சமாஜுக்கு 15 இடங்களும் சமாஜ்வாதிக்கு இரு இடங்களும் கிடைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. அம் மாநிலத்தில் வெல்லும் கட்சியே ஆட்சியை பிடிக்க முடியும் என்பதால் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைப்பது கடினம் என கூறப்பட்டுள்ளது.

தற்போது பாஜகவின் ஆதரவு செய்தி தொலைக்காட்சி என கூறப்படும் டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், பாஜகவுக்கு மொத்தம் 252 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைக்கும். அதாவது பெரும்பான்மைக்கு 21 இடங்கள் குறைவாகவே பாஜகவுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் கட்சிக்கு 147 இடங்களும்,  பாஜகவுக்கு எதிரான மற்ற கட்சிகளுக்கு 144 இடங்களும்  கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து பாஜகவோ அல்லது காங்கிரசோ மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.

இதனால் வரும் தேர்தலில் வெற்றி பெறும் மாநில கட்சிகளே கிங் மேக்கர்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.