காவிரி  மேலாண்மை வாரியம்  அமைப்பதற்கான பணிகள் தொடங்கி விட்டது என்றும். ஆனால் அதற்கான  பணிகள் முடிவடைய கூடுதல் காலம் ஆக வாய்ப்புள்ளதாகவும்  மத்திய நீா்வளத்துறை செயலாளா் உபேந்திர பிரசாத் சிங்  தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக  கடந்த மாதம் 16ம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கிய  உச்சநீதிமன்றம் , தீா்ப்பு வெளியான 6 வார காலத்திற்குள் காவிரி  மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

ஆனால் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு கிட்டத்தட்ட 5 வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில் அதற்கான முயற்சிகளைக் கூட மத்திய அரசு எடுக்கவில்லை என தமிழக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இது தொடர்பாக  கடந்த மாதம் 22ம் தேதி தமிழக அரசு சார்பில்  அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டு முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  அதில் தமிழக எம்.பி.க்கள், மற்றும் எம்எல்ஏக்கள் இணைந்து பிரதமரை சந்தித்து முறையிட முடிவு செய்தனர்.

ஆனால் இந்த திட்டம் குறித்து அறிந்த  பிரதமா்  மோடி தமிழக அரசியல் கட்சியினர் தன்னை சந்திப்பதைவிட மத்திய  நீா்வளத் துறை அமைச்சகத்தை நாடுமாறு  அறிவுரை வழங்கினார்.

உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட அந்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றக் கூட்டத்தைப் புறக்கணித்து அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து கடந்த 8 நாட்களாக போராடி வருகின்றன.

இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் , காவிரி  மேலாண்மை வாரியம்  அமைப்பதற்கான பணிகள் தொடங்கி விட்டது என்றும். ஆனால் அதற்கான  பணிகள் முடிவடைய கூடுதல் காலம் ஆக வாய்ப்புள்ளதாகவும்  தெரிவித்தார்.