மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராத வண்ணம் கடந்த சனிக்கிழமையன்று தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சியை அமைத்தது. அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி தேவேந்திர பட்னாவிசுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

துணை முதல்வராக அஜித் பவார் பொறுப்பேற்றார். கவர்னரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சிவ சேனா உள்ளிட்ட உச்ச நீதிமன்றத்துக்கு சென்றன. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் உடனடியாக பெரும்பான்மையை நிருபிக்கும்படி பா.ஜ.க.வுக்கு உத்தரவிட்டது. 

பெரும்பான்மை பலம் இல்லாததால் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து ஆட்சி அமைக்க வருமாறு சிவ சேனாவின் உத்தவ் தாக்கரேவுக்கு அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி முறைப்படி அழைப்பு விடுத்தார். 

மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நேற்று பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர். இன்று மாலை மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்க உள்ளார். 

சிவாஜி பார்க்கில் இன்று மாலை 6.40 மணிக்கு கவர்னர் உத்தவ் தாக்கரேவுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
தாக்கரே குடும்பத்திலிருந்து முதலாவதாக தேர்தலில் களமிறங்கிய வெற்றி பெற்ற உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரேவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

 ஆனால், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் இருந்தால் அது கட்சி பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடும். அதனால் உத்தவ் தாக்கரே தலைமையில் அமையும் அமைச்சரவையில் ஆதித்யா தாக்கரேவுக்கு இடம் கிடைக்காது.

 

இருப்பினும் நிழல் முதல்வராக அவர் செயல்படுவார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.அதேசமயம் சிவசேனாவுக்கும், என்சிபிக்கு கட்சிக்கும் தலா 15 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளன. இதில் சிவசேனாவுக்கு 5 ஆண்டுகள் முழுமையாக முதல்வர் பதவியும், என்சிபிக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட உள்ளது. 
காங்கிரஸ் கட்சிக்கு 13 அமைச்சர் பதவிகளும், சபாநாயகர் பதவியும் வழங்கப்பட உள்ளது.