வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக – காங்கிரஸ் கூட்டணி பேசி முடிக்கப்பட்டுளளது. அந்தக் கூட்டணியில் மதிமுக, இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை உள்ளதாக கூறப்படுகிறது.

இதே போல் அதிமுக- பாஜக  பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழகத்தல் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்போடு இடைத் தேர்தல் அறிவிப்பும் வரலாம் என எதிபார்க்கப்படுகிறது. ஆனால் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் குறைந்தது 8 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றால்தான் ஆட்சியில் தொடர முடியும் என ஒரு நெருக்கடியான சூழல் உள்ளது. அதனால் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளார்.

இந்நிலையில்தான் பாஜகவுடன் நடைபெற்று வரும் கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுக புதிய ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது. அதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கேட்கும் தொகுதிகளை ஒதுக்கித் தந்து விடுவது என்றும், அதே நேரத்தில் இடைத் தேர்தல்களை நடத்தாமல் முடிந்த அளவு தள்ளிப் போடுவது டீல் பேசப்படுடள்ளதாக கூறப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாகத்தான் நாடாளுமன்றத்தில் தம்பிதுரை பாஜகவுக்கு எதிராக கடுமையாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் பாஜகவை அதிமுக நிர்பந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
  
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலோடு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகள் உட்பட 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என பலரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், அந்த 21 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்குமா என்கிற சந்தேகம்  எழுந்துள்ளது. கூட்டணி விஷயத்தில் தற்போது யார்? யாரை மிரட்டுகிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.